Saturday, March 24, 2012

கலைஞரின் திராவிடக் குழப்பம்

திராவிட இயக்க நூறாம் ஆண்டுத் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியுள்ள பேச்சிலிருந்து, அவர் என்ன கூற வருகிறார் என்பதையே புரிந்து கொள்ள முடியவில்லை. 

‘மொழியால் தமிழன்; இனத்தால் திராவிடன்; நாட்டால் இந்தியன்; உலகத்தால் மனிதன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறார் அவர். ‘நாட்டால் இந்தியன்’ என்று அவர் கூறுவது உண்மையானால், ‘இந்திய நாடு இந்தியருக்கே’ என்பதாக அல்லவா அவருடைய கொள்கை இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்று மீண்டும் குரலெழுப்ப நேரிடும் என்று எச்சரிப்பது ஏன்? தி.மு.க.வை ஆட்சியில் இருக்க அனுமதித்தால் இந்தியனாகவும், இல்லாவிட்டால் திராவிடனாகவும் இருப்பேன் என்பது என்ன வகையான நாட்டுப் பற்று என்று புரியவில்லை. 

‘இனத்தால் திராவிடன்’ என்றால், ‘தமிழினத் தலைவன்’ என்று அழைக்கப்படுவதிலேதான் எனக்குப் பெருமை என்று இத்தனை காலம் ஏன் அவர் கூறி வந்தார்? ‘திராவிட இனத் தலைவர்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்றல்லவா அவர் ஆசைப்பட்டிருக்க வேண்டும்? இன உணர்வு வேண்டும் என்று கலைஞர் அடிக்கடி கூறுவது தமிழ் இன உணர்வையா? திராவிட இன உணர்வையா? 

‘திராவிடமே தமிழ், தமிழே திராவிடம்; தமிழர்கள் என்றாலே திராவிடர்கள்; தமிழ்நாடு என்றாலே திராவிட நாடு’ என்று அண்ணாதுரை முன்பு கூறியதையும் நினைவுபடுத்தியிருக்கிறார் கலைஞர். தமிழும், திராவிடமும் ஒன்று என்றால், மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன் என்று தனித்தனியாகப் பிரித்துக் கூறுவது ஏன்? இத்தனை நாள் அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தாரா? திராவிட நாட்டின் முதல்வராக இருந்தாரா? 

தமிழ்நாடுதான் திராவிடநாடு என்றால், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் எல்லாம் திராவிடப் பகுதிகள் இல்லையா? அல்லது தென் திராவிடம் வட திராவிடம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறதா? தமிழ்நாடும் திராவிட நாடும் ஒன்றே என்று கூறிவிட்டு, ‘தனி திராவிட நாடு கேட்கும் நிலை ஏற்பட்டு விடும்’ என்று ஏன் பயமுறுத்துகிறார்? சொல்வதற்கில்லை. மத்திய அரசு எச்சரித்தால், ‘திராவிடமே இந்தியா. இந்தியாவே திராவிடம்’ என்று மாற்றிக் கொள்வாரோ என்னவோ! 

‘பார்ப்பன எதிரிகள்’ என்று பிராமணர்களுக்கு எதிராகவும், ஆவேசமாகப் பேசியிருக்கிறார் கலைஞர். பிராமணர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்பதே அவர் கருத்தாக இருக்கிறது. அப்படியென்றால், ‘சாதி என்ற சனி ஒழிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் எண்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறேன்’ என்று கூறியதெல்லாம் என்னவாயிற்று? 

பிராமணர்கள், ‘பார்ப்பன எதிரிகள்’ என்றால், இவர் அடிக்கடி பாராட்டும் சூரிய நாராயண சாஸ்திரி என்கிற பரிதிமாற் கலைஞரும் பார்ப்பன எதிரிதானா? ஒருவேளை, பார்ப்பனர்களில், திராவிட பார்ப்பனர்கள் என்று ஏதாவது ஒரு பிரிவு இருக்கிறதா? 


‘தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் பிராமணர்கள் திராவிட பார்ப்பனர்கள்’ என்றும், ‘தி.மு.க.வுக்கு வாக்களிக்காத பிராமணர்கள் ஆரிய பார்ப்பனர்கள்’ என்றும் அண்ணாதுரை எப்போதாவது சொல்லியிருக்கலாம். நமக்கு என்ன தெரியும்? நாட்டால் இந்தியன். திராவிட நாடுதான் லட்சியம். ‘தமிழும், திராவிடமும் ஒன்றே’. போதாதற்கு ‘கலைஞர்தான் தமிழ்’ என்கிற பாராட்டுகள் வேறு. அடடா, கொள்கையில்தான் என்ன ஒரு தெளிவு! கலைஞரின் இந்த திடீர் திராவிட வீராவேசத்தை நினைத்து தமிழர்கள் யாரும் மிரண்டு விடத் தேவையில்லை. மாநில சுயாட்சி, தனி ஈழம் போன்ற – பேச்சளவிலேயே முடிந்து விடக் கூடிய – கொள்கைகளில் ஒன்றுதான் இதுவும். நிறைவேறும் வாய்ப்பே இல்லாத இந்த நிரந்தரக் கொள்கைகளுக்கும் என்றாவது ஒருநாள் தி.மு.க. நூற்றாண்டு விழா கொண்டாடும்.  

No comments:

Post a Comment