Wednesday, February 2, 2011

வந்தே சம்ஸ்க்ருத மாதரம்

 கலா என்கிற சம்ஸ்க்ருத வார்த்தை, கல்வி என்கிற தமிழ்ச்சொல், கல்ச்சர் என்கிற ஆங்கில வார்த்தை மற்றும் கொலே என்கிற பிரஞ்சு வார்த்தை எல்லா வற்றுக்கும் மூலம் ஒன்றே. கலை சர்வ தேசத்தையும் தழுவுகிற விஷயமாதலால் வார்த்தை ஒன்றாகவே இருக்கிறது. என்றார் காஞ்சி பரமாசார்யார். ஒரு தேசத்தின்  பண்பாடு மற்றும் கலாசார வளர்ச்சியை, அந்தப் பிரதேச மக்களிடம்  உள்ள இலக்கியங்களாலும் கலைகளாலும் அறியலாம். 
கலை, இலக்கியம், அறிவியல், கணிதம், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் நமது பாரத தேசம் உன்னதமான நிலையில் இருந்த காலத்தில், இன்று நவீன நாகரிகத்தில் திளைத்திருக்கும் மேலை நாட்டவர்கள், இலை தழைகளை அணிந்து கொண்டு குகையில் வாழ்ந்து வந்தார்கள். 
அப்படிப்பட்ட நாகரிகத்தின் உச்சியில் இருந்தவர்கள்  நாம். 
இன்று மேலை நாட்டவர்கள் வான சாஸ்திரத்திற்கும் பூகோள சாஸ்திரத்திற்கும் பற்பல உபகரணங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் கணிக்கிறார்கள். இப்படிப்பட்ட கருவிகள் எதுவும் இல்லாமலேயே நம் முன்னோர்கள் மிகத் துல்லியமாக பஞ்சாங்கத்தை கணிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள். இப்போதும் கூட பௌர்ணமி அமாவாசை மற்றும் கிரஹணங்கள் எல்லாம் மிகக் சரியாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதைக் காணலாம்.
பூமி உருண்டை என்பதை ஆங்கிலேயர்கள் சொல்லித்தான் நாம் அறிந்து கொண்டோம் என்று இன்றும் பலர் நினைக்கிறார்கள்.பூமியின் வடிவத்தை நாம் நன்கு அறிந்திருந்தோம் என்பதை  பூகோள சாஸ்திரம் என்று பெயரிட்டதில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
ஒரு குழந்தை தனது தாயின் வயிற்றில் இருக்கும் போதே கற்க ஆரம்பித்துவிடுகிறது என்று மேலை நாட்டு மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டு ஆச்சரியப் படுகிறோம். ஆனால், இதையே பிரகல்லாதன், அபிமன்யு வரலாற்றை எல்லாம் கேட்டால் ஒதுக்கிவிடுகிறோம்.
இவை எல்லாமே சிறு சிறு உதாரணங்கள்தான். இவற்றைப் போல் நாம் ஒதுக்கிய விஷயங்கள் பற்பல. நம் அலட்சியத்தால் நாம் சந்திக்கும் இழப்புகள் மிக அதிகம்.
இன்றைக்கு இருக்கும் அணு விஞ்ஞானம் மகா பாரதப் போரில் அசுவத்தாமாவால் கையாளப் பட்டதும், அதை லாவகமாக கிருஷ்ணர் எதிர் கொண்டதும் பலரும் அறிந்ததுதான். இவற்றை எல்லாம் நன்கு அறிந்தவர்கள் ,  வெளிப்படையாக யாருக்கும், அவ்வளவு எளிதில் போதிக்கவில்லை.
அப்படிப்பட்ட ஆபத்தான யுக்திகள் எல்லாம் தவறாகப் பயன்பட்டுவிடக் கூடாதே என்ற நல்லெண்ணம்தான்  காரணம். ஒரு வைத்தியரின் கையில் உள்ள கத்திக்கும், கொலை காரனின் கையில் உள்ள கத்திக்கும் வித்யாசம் உள்ளதல்லவா?  இதை நாம் நன்கு  புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக சமஸ்க்ருதம்.
சம்ஸ்க்ருதம் பிராம்மணர்களுக்கு மட்டுமான மொழி என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை?  சம்ஸ்க்ருதத்தில் உள்ள காவியங்களில் நூற்றுக்கு 95% பிராமணர் அல்லாதவர்களால்தான் எழுதப் பட்டுள்ளன. வால்மீகி, வியாசர், காளிதாசர், என இப்படி புகழ் பெற்ற காவிய கர்த்தாக்கள் யாவரும் பிராமண குலத்தவர்கள் அல்லர். எனவே சமஸ்க்ருதம் பிராம்மண மொழி என்பதும் சரியல்ல.  
பின் ஏன் சம்ஸ்க்ருதம்  பொதுஜன மொழியாகவில்லை?  முற்காலத்தில் சம்ஸ்க்ருதம் அனைவராலும் பேசப் பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக பிராக்ருதம் வழக்கில் இருந்தது. பாமர மக்கள் வழக்கில் இருந்த சம்ஸ்க்ருதம் தான் பிராக்ருதம் என்பது. இது சமஸ்க்ருததைப்  போல் அவ்வளவு இலக்கண சுத்தமான மொழி இல்லை, எனவே இது பண்டிதர்கள் மத்தியில் வழக்கில் இல்லை. இந்தக் காரணத்தால் பண்டிதர்கள் பயன் படுத்திய மொழிக்கும், பொதுஜன வழக்கில் இருந்த மொழிக்கும் வித்யாசம் ஏற்பட்டு, பிற்காலத்தில் சமஸ்க்ருதம் என்பது பண்டிதர்களின் மொழியானது.
இதனால் சமஸ்க்ருதம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே அடை பட்டுவிட்டது. எனவே சம்ஸ்க்ருதம் என்பது பிராம்மண மொழி என்பதைவிட பண்டித மொழி என்பதுதான் பொருத்தம்.
இலக்கண சுத்தமான சமஸ்க்ருத மொழியை அனைவராலும் பேச  முடியாதா?  அப்படிப் பேச முன் வராததற்கு என்ன காரணம்? இதையும் சற்று ஆராய்வோம்.
இதற்கு என்னுடைய சொந்த அனுபவத்தையே உதாரணமாக சொல்கிறேன்.
சம்ஸ்க்ருதம் படிக்க வேண்டும் என கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக முயற்சித்து பல ஆசிரியர்களை அணுகினேன். அவர்கள் அனைவரும் பாடம் நடத்திய முறையில் ஒரு ஒற்றுமை தெரிந்தது. சமஸ்க்ருதத்தில் "விபக்தி" என்று ஒரு இலக்கண விதி உள்ளது. அதை தமிழில் வேற்றுமை உருபுகள் என்பார்கள். தமிழில் உள்ளது போல் ஒருமை பன்மை என்று இல்லாமல், ஒருமை, இருமை, பன்மை என மூன்று வகை உள்ளது.
எனக்குத் தெரிந்து  மாணவர்கள் சம்ஸ்க்ருதம் படிப்பதை வெறுக்க ஆரம்பிக்கும் இடம் இதுவாகத்தான் இருக்கும். ஏனெனில் இந்த இடத்தில சம்ஸ்க்ருதத்தில் உள்ள அத்தனைப் பெயர்ச் சொற்களுக்கும், அவை ஆண்பாலா பெண்பாலா, அல்லது அலியா (நபும்சக லிங்கம் என்று சொல்வார்கள். இதற்கு தமிழில் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை) என்று முதலில் கண்டு பிடித்து அதற்கு ஏற்றவாறு ஏழு வேற்றுமை உருபுகளையும் கண்ணை மூடிக் கொண்டு ஒப்பிக்க வேண்டும்.விபக்தி என்ற இந்த விதியை விதியே என்று மனப்பாடம் செய்வது தான்   மாணவர்களின் விதி. மாணவர்கள் எந்த அளவுக்குப் புரிந்து
கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் ஆசிரியர்கள் கவலை கொள்வதேயில்லை .
 
அடுத்த காரணம். சமஸ்க்ருதம் என்றாலே வேதம், சாஸ்திரம், புராணம், மந்திரம் இவைகள்தான் என்றாகிவிட்டது. சம்ஸ்க்ருதம் படிப்பது என்றாலே ஏதாவது ஒரு ஸ்லோகத்தை எடுத்துக் கொண்டு அதை விளக்குகிறேன் என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனாலேயே மற்ற மொழிகளைப் போல் சம்ஸ்க்ருதமும் ஒரு மொழிதான். அதை தினசரி பேச்சு மொழியாகவும் பயன் படுத்த .முடியும்  என்ற எண்ணம் யாருக்குமே வருவதில்லை. சம்ஸ்க்ருதம் வளராததற்கு . இதுவும் ஒரு முக்கிய காரணம்.
சமீபத்தில் சம்ஸ்க்ருத பாரதி என்ற நிறுவனத்தைப் பற்றி அறிய நேர்ந்தது. அவர்களுடைய செயல்பாடுகள் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. முக்கியமாக நான் வெறுக்கும் விபக்தியை கண்ணை மூடிக் கொண்டு மனப்பாடம் செய்ய சொல்லவில்லை. ஆனால் இப்போது நான்  ஒவ்வொரு விபக்தியையும் ஓரளவு சரியாகப் பயன் படுத்தக் கற்றுக் கொண்டுவிட்டேன். அவர்களுடைய செயல்முறை பாடத் திட்டம்தான் இதற்கு காரணம். மேலும், சம்ஸ்க்ருதம் என்றாலே, ஸ்லோகம் மற்றும் மந்திரங்கள்தான் என்ற நிலையை மாற்றி,  நம் அன்றாட உரையாடல்களுக்கு சமஸ்க்ருததைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இங்கே பணிபுரியும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வுடன் போதிக்கிறார்கள் என்பதை நிச்சயமாக சொல்லியே ஆக வேண்டும். ஒருமுறை அவர்கள் நடத்திய கேம்ப்புக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே திருமதி. ஜ்யோத்ஸ்னா கலவார் என்ற ஆசிரியை பாடம் நடத்தினார் பாருங்கள்......அவர் சமஸ்க்ருததிலேயே பேசி பாடம் நடத்திய விதம் சிறு குழந்தைக்குக் கூட மிக எளிதாகப் புரியும். அந்த மூன்று நாட்கள் நடந்த கேம்ப்பிலேயே நான் தெரிந்து கொண்ட விஷயங்கள் மிக அதிகம்.
அதற்குப் பிறகும் திரு. வெங்கடேஷ் என்று ஒரு ஆசிரியர், ஒவ்வொரு வாரமும் தொலைபேசி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு  எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக சம்பளம் எதுவும் அவர் பெறுவதில்லை. இத்தனைக்கும் அவர் சாதாரணமானவர் அல்ல. ஒரு பெரிய கம்பெனியில் பொறுப்பான எஞ்சினியர் பதவி வகிப்பவர். வகுப்பில் மாணவர்கள்  கேட்க்கும் கேள்விகளுக்கெல்லாம் அவ்வளவு பொறுமையாக பதிலளிப்பார்.பாடங்களில் நாங்கள் செய்யும் பெரிய பெரிய தவறுகளை எல்லாம் கனிவுடன் திருத்துவார். அதேசமயம், சிறிய விஷயங்களானாலும் பாராட்டத் தவற மாட்டார். அதுமட்டுமில்லாமல், இரவு எத்தனை மணிக்கு சந்தேகம் கேட்டு மெயில் அனுப்பினாலும் அடுத்த பத்து நிமிடங்களில் பதில் வந்துவிடும். அத்தனை வேலை பளுவிற்கு இடையிலும் அவர் காட்டும் பொறுமையும் அக்கறையும் மிக மிக அபாரம். மாணவர்களாகிய நாங்கள் பாடத்தைக் கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ....அவரிடமிருந்து இந்த நல்ல குணங்களைக் கண்டிப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கொடுக்கும் உற்சாகமும், ஊக்கமும் கண்டிப்பாக மாணவர்களை செம்மைப் படுத்தும்.
மேலும் சமஸ்க்ருத பாரதி நிறுவனத்தார்
மிகவும் முயற்சித்து இருபது CD க்கள்
வெளியிட்டுள்ளார்கள்.  சமஸ்க்ருதத்தில் தவறில்லாமல் பேச கற்றுக் கொள்ள அதுவே போதும். நமக்கு வசதிபட்ட நேரத்தில் வீட்டிலிருந்தபடி நாமே கற்றுக் கொண்டுவிடலாம் சம்ஸ்க்ருதம் செத்த பாஷை என்று சொல்பவர்களுக்கு, இவர்களுடைய செயல்பாடுகள், சரியான சவுக்கடியாக விளங்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
சமஸ்க்ருத பாரதி நிறுவனத்தாருக்கு ஒரு வேண்டுகோள். குழந்தைகளுக்கான கதைகள் அடங்கிய கார்டூன் CD க்கள் ஏற்கெனவே இருக்கும் என நினைக்கிறேன். அவற்றில் எல்லாம் ராமாயணம், மகா பாரதம், போன்ற புராணக் கதைகள்  மட்டுமில்லாமல், tom and jerry, dora, caillou என்றெல்லாம் இந்தத் தலைமுறை குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் வகையில் animation படங்கள் உள்ளனவா  என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் இதை செயல் படுத்தினால் இன்னும் எளிதில் சமஸ்க்ருதம் பலரை சென்றடையும்.அமெரிக்காவில், நடத்துவது போல் இந்தியாவிலும் கிராமங்களில் கேம்ப்களும் கோவில்
மற்றும் பஜனை மடங்களில் எல்லாம் வாரந்திர வகுப்புகளும் நடத்தினால் சமஸ்க்ருதம்
படிக்க பலரும் முன்வருவார்கள் . ஆனால் அமெரிக்காவில் இருப்பது போல் இந்தியாவில் எத்தனை பேர் அர்ப்பணிப்புடன் பாடம் நடத்த முன் வருவார்கள் என்பது தெரியவில்லை. அதுவும் எங்கள் ஆசிரியர் போல் யாராவது வருவார்களா என்பது சந்தேகமே.

 அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் ஒவ்வொரு
மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியின் உதவியுடன் போதிக்கும் முறையையும் செயல் படுத்தினால், அதிகம் படித்திராத மற்றும் போதிய அளவு ஆங்கில அறிவு இல்லாதவர்களுக்கும் கூட வசதியாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக சமஸ்க்ருததில்தான் எல்லா வேதங்களும், மந்திரங்களும் உள்ளன...அது தேவ பாஷை ஆகையால்
அதை அனைவரும் படியுங்கள் என்று கூறினால் இன்றைய இளைஞர்கள் படிக்க மாட்டார்கள். அவர்களை சுண்டி இழுக்க சமஸ்க்ருதத்தில் உள்ள  அறிவியல் , கணிதம் மருத்துவம்...இன்னும் என்னவெல்லாம் நவீன கால  விஷயங்கள் உள்ளனவோ அனைத்தையும்
தெரிவித்து...அவர்களுக்கு இந்த  மொழியின் மீது ஒரு ஆர்வத்தை
உருவாக்கவேண்டும்.ஆடுகிற  மாட்டைஆடிக்கற     என்பார்கள். அது போல அவர்கள் வழியிலேயே சென்றுதான் அவர்களை நம் பக்கம் திருப்ப வேண்டும். 
இவற்றுகெல்லாம் மேலாக தொலைகாட்சியில் அரை மணி நேரம் சமஸ்க்ருத வகுப்புகள் நடத்தவும் முயற்சிக்கலாம். சங்கரா டி வி போன்ற சானல்களில் முதலில் முயற்சிக்கலாம். 
கூடவே சமஸ்க்ருத பாரதி CD க்களையும் தமிழகத்தில் Higginbothams, Landmark போன்ற புகழ் பெற்ற புத்தக கடைகளில் எல்லாம் பரவலாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். முடிந்தால் சமஸ்க்ருததுக்காக  அந்தந்த மாநில மொழியில் ஒரு பத்திரிக்கையும் ஆரம்பிக்கலாம்.  அதுமட்டுமில்லாமல், இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 25 பேருக்காவது போதிப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவையனைத்தையும் செயல் படுத்துவது மிகக் கடினம்தான். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. விடாமல் முயற்சி செய்தால் கண்டிப்பாக நமது லட்சியத்தை அடைந்துவிடலாம். 
சமஸ்க்ருதம் தானாக வளரும்.

2 comments:

ravichandran said...

good one....will this fall on the right ears who are spending (!) crores to promote Hindi through all channels of spending...how much they have achieved in promoting Hindi will need another enquiry commission...(remember..for this the order should be issued in Hindi..)...

Kannan - +91 98840 94414 said...

Fantastic...

Post a Comment