Saturday, March 24, 2012

காஞ்சி மஹானின் கருணை

பிடிப்பைத் தந்த பிரான்!

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர். 

"பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்...ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்"

பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. "வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?"

"ஆமா........."

"எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"

"உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்"

அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள். 

"இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........." 

கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்"

"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்" பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார். பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது........."ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்!

"சரி..........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............."

"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும்?

ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............." துக்கத்தால் குரல் அடைத்தது.

"ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!

என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள்.

பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.

கலைஞரின் திராவிடக் குழப்பம்

திராவிட இயக்க நூறாம் ஆண்டுத் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியுள்ள பேச்சிலிருந்து, அவர் என்ன கூற வருகிறார் என்பதையே புரிந்து கொள்ள முடியவில்லை. 

‘மொழியால் தமிழன்; இனத்தால் திராவிடன்; நாட்டால் இந்தியன்; உலகத்தால் மனிதன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறார் அவர். ‘நாட்டால் இந்தியன்’ என்று அவர் கூறுவது உண்மையானால், ‘இந்திய நாடு இந்தியருக்கே’ என்பதாக அல்லவா அவருடைய கொள்கை இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்று மீண்டும் குரலெழுப்ப நேரிடும் என்று எச்சரிப்பது ஏன்? தி.மு.க.வை ஆட்சியில் இருக்க அனுமதித்தால் இந்தியனாகவும், இல்லாவிட்டால் திராவிடனாகவும் இருப்பேன் என்பது என்ன வகையான நாட்டுப் பற்று என்று புரியவில்லை. 

‘இனத்தால் திராவிடன்’ என்றால், ‘தமிழினத் தலைவன்’ என்று அழைக்கப்படுவதிலேதான் எனக்குப் பெருமை என்று இத்தனை காலம் ஏன் அவர் கூறி வந்தார்? ‘திராவிட இனத் தலைவர்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்றல்லவா அவர் ஆசைப்பட்டிருக்க வேண்டும்? இன உணர்வு வேண்டும் என்று கலைஞர் அடிக்கடி கூறுவது தமிழ் இன உணர்வையா? திராவிட இன உணர்வையா? 

‘திராவிடமே தமிழ், தமிழே திராவிடம்; தமிழர்கள் என்றாலே திராவிடர்கள்; தமிழ்நாடு என்றாலே திராவிட நாடு’ என்று அண்ணாதுரை முன்பு கூறியதையும் நினைவுபடுத்தியிருக்கிறார் கலைஞர். தமிழும், திராவிடமும் ஒன்று என்றால், மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன் என்று தனித்தனியாகப் பிரித்துக் கூறுவது ஏன்? இத்தனை நாள் அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தாரா? திராவிட நாட்டின் முதல்வராக இருந்தாரா? 

தமிழ்நாடுதான் திராவிடநாடு என்றால், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் எல்லாம் திராவிடப் பகுதிகள் இல்லையா? அல்லது தென் திராவிடம் வட திராவிடம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறதா? தமிழ்நாடும் திராவிட நாடும் ஒன்றே என்று கூறிவிட்டு, ‘தனி திராவிட நாடு கேட்கும் நிலை ஏற்பட்டு விடும்’ என்று ஏன் பயமுறுத்துகிறார்? சொல்வதற்கில்லை. மத்திய அரசு எச்சரித்தால், ‘திராவிடமே இந்தியா. இந்தியாவே திராவிடம்’ என்று மாற்றிக் கொள்வாரோ என்னவோ! 

‘பார்ப்பன எதிரிகள்’ என்று பிராமணர்களுக்கு எதிராகவும், ஆவேசமாகப் பேசியிருக்கிறார் கலைஞர். பிராமணர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்பதே அவர் கருத்தாக இருக்கிறது. அப்படியென்றால், ‘சாதி என்ற சனி ஒழிய வேண்டும் என்பதற்காகத்தான் நான் எண்பது ஆண்டுகளாகப் போராடி வருகிறேன்’ என்று கூறியதெல்லாம் என்னவாயிற்று? 

பிராமணர்கள், ‘பார்ப்பன எதிரிகள்’ என்றால், இவர் அடிக்கடி பாராட்டும் சூரிய நாராயண சாஸ்திரி என்கிற பரிதிமாற் கலைஞரும் பார்ப்பன எதிரிதானா? ஒருவேளை, பார்ப்பனர்களில், திராவிட பார்ப்பனர்கள் என்று ஏதாவது ஒரு பிரிவு இருக்கிறதா? 


‘தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் பிராமணர்கள் திராவிட பார்ப்பனர்கள்’ என்றும், ‘தி.மு.க.வுக்கு வாக்களிக்காத பிராமணர்கள் ஆரிய பார்ப்பனர்கள்’ என்றும் அண்ணாதுரை எப்போதாவது சொல்லியிருக்கலாம். நமக்கு என்ன தெரியும்? நாட்டால் இந்தியன். திராவிட நாடுதான் லட்சியம். ‘தமிழும், திராவிடமும் ஒன்றே’. போதாதற்கு ‘கலைஞர்தான் தமிழ்’ என்கிற பாராட்டுகள் வேறு. அடடா, கொள்கையில்தான் என்ன ஒரு தெளிவு! கலைஞரின் இந்த திடீர் திராவிட வீராவேசத்தை நினைத்து தமிழர்கள் யாரும் மிரண்டு விடத் தேவையில்லை. மாநில சுயாட்சி, தனி ஈழம் போன்ற – பேச்சளவிலேயே முடிந்து விடக் கூடிய – கொள்கைகளில் ஒன்றுதான் இதுவும். நிறைவேறும் வாய்ப்பே இல்லாத இந்த நிரந்தரக் கொள்கைகளுக்கும் என்றாவது ஒருநாள் தி.மு.க. நூற்றாண்டு விழா கொண்டாடும்.  

ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்

ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்
 
ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.

க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில ÷க்ஷத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.

நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது, பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.

1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.

2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.

3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.

4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.

5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது. இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.

இது பெண்களுக்கு மட்டும்

விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்ப என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,

கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு

என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
 

 

தமிழ் நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லை

                   1990 ஆம் ஆண்டு நான் சங்கீத வித்வத் சபையில் உள்ள இசைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி. என்னுடன் படித்தவர்களில் பெரும்பான்மையோர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.

                  ஒரு நாள் எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது அவர்கள், “சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே…சம்ஸ்க்ருதம் & தெலுங்கில்தான் பாடி இருக்கிறார்கள்.எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால், சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள் கூறினார்கள்.தமிழ் சுத்த waste என்றார்கள். சாதாரணமாக நான் மொழிகளிக்கிடையில் எந்த வித்யாசமும் பார்ப்பதில்லை. ஆனால், அவர்கள் இப்படி சொன்னதும் எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

                ஆகையால் நானும் பதிலுக்கு ஏன்? தமிழில் தேவாரம், திருவாசகம் எல்லாம் இல்லையா? பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா என்று வாதாடினேன்.அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் ஈடு படவில்லை. அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன்.

                என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார், என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். நானும் சொன்னேன். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே மதிக்காக என் அம்மா, ” நாளைக்கு காஞ்சீபுரத்துக் போய் பெரியவாளை தரிசனம் பண்ணப் போறேன். நாளைக்கு காலேஜுக்கு லீவ் போட்டுவிட்டு நீயும் வா என்றார். எனக்கோ மன சங்கடம். நம் வருத்தத்தைப் பற்றி அம்மா கொஞ்சம் கூட கவலையே படவில்லையே….என்று.

               அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எனவே அடுத்த நாள், கல்லூரிக்குச் செல்லாமல் காஞ்சீபுரம் செல்வது என்று தீர்மானித்தேன்.

              எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. எனவே நான் வரைந்த சங்கீத மும் மூர்த்திகளின் (தியாக ராஜர், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்த்ரிகள்) ஓவியங்களை மஹா சுவாமிகளுக்கும் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

             மறுநாள் நானும் என் அம்மாவும் மஹா சுவாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருந்தோம். தரிசனமும் நன்றாகக் கிடைத்தது. நான் கொண்டு சென்றிருந்த ஓவியங்களை, சுவாமிகளின் அருகில் இருந்த உதவியாளர் மூலமாக, சுவாமிகளிடம் கொடுத்தேன். அந்த மூன்று படங்களையும் பார்த்த பெரியவர், இதெல்லாம் யார் வரைஞ்சா? என்றார். அந்த உதவியாளர், என் பெயரையும் ஊரையும் கேட்டார். சொன்னேன். அப்படியே பெரியவாளிடம் சொன்னார். உடனே பெரியவா, அந்த குழந்தையை, என் முன்னாடி வர சொல்லு, என்றார். நானும் அம்மாவும் போனோம். எங்களை உட்கார சொன்னார்.

            அதற்கு முன் அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததோ அவருடன் பேசியதோ இல்லை என்பதால், ஆச்சர்யம் சந்தோஷம் பயம் என பலவித உணர்சிகளுடன் எதிரே அமர்ந்திருந்தேன்.

           என்னுடைய படிப்பு பற்றி எல்லாம் விசாரித்தார். நானும் சங்கீதக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினேன். அப்போது ஒரு க்ஷண நேரம் முதல் நாள் நடந்த வாக்கு வாதத்தைப் பற்றி பெரியவாளிடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வு கேட்கலாமா என்று தோன்றியது. அப்படி செய்தால், அதிகப் பிரசங்கி என்று நினைத்துவிடப் போகிறார்களே என்று என்னை நானே அடக்கிக் கொண்டுவிட்டேன்.

           ஓவியங்களைப் பார்த்த பெரியவர், சங்கீத மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாட சொன்னார். மூன்று பேருடைய கீர்த்தனைகளிலும் ஒவ்வொன்று பாடினேன்.

பிறகு அந்த ஓவியங்களைப் பற்றி விசாரித்தார்.

             அதில் முத்து சுவாமி தீட்சிதரின் . கையில் உள்ள வீணையில் நான் ஒரு தவறு செய்திருந்தேன். முத்து சுவாமி தீட்சிதரின் வீணை மற்ற வீணைகளைப் போல் இல்லாமல், யாளி மேல் பக்கமாக இருக்கும். ஆனால், எவ்வளவு முயன்றும் ஏனோ அந்த இடம் மட்டும் எனக்கு சரியாகவே வரைய வரவில்லை. ஆகையால், எல்லா வீணைகளையும் போல் யாளியைக் கீழ்ப் பக்கமாகவே வரைந்திருந்தேன்.

           அந்தத் தவறை சுட்டிக் காட்டிய பெரியவா, "அந்த வீணை தீட்சிதருக்கு சாக்ஷாத் கங்கா தேவியே அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்தது. அதை மாத்தறது தப்பு. அடுத்த தரம் வரும் போது அதை சரியா வரஞ்சு எடுத்துண்டு வா." என்றார்.

         பிறகு, “இவளோட ஜீவிய சரித்ரம் தெரியுமோ உனக்கு?” என்றார். நானும், ” ஓரளவுக்குத் தெரியும் பெரியவா” என்றேன். தெரிஞ்சமட்டும் சொல்லு…..என்றார்.

          இவா மூணு பேரும் திருவாரூர்லே பிறந்தா…..என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம். உடனே நிறுத்து என்று சைகை செய்த பெரியவர் தொடர்ந்தார். அவர் வாக்கிலேயே சொல்கிறேன்.

        “தர்சநாத் அப்ர சதஸி ஜனநாத் கமலாலையே

         காச்யாம் து மரணான் முக்தி: ஸ்மரணே அருணாச்சலே“

          இதுக்கு என்ன அர்த்தம்னா…....

         சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணினா முக்தி, சிதம்பரத்தை அப்ர சதஸ் ன்னே சொல்லி லிருக்கு. சபைன்னா, சித் சபைதான். சபாபதின்னா நடராஜ மூர்த்திதான். ருத்ரத்துலே கூட சபாப்யோ சபாபதிப்யச்சவோ நமோ நமோ…ன்னு சொல்லி இருக்கு.

       இப்பேர் பட்ட மஹா சபையான பொன்னம்பலத்தை தரிசனம் பண்ணிக்கணும்.

       அடுத்தது, ஜனநாத் கமலாலையே….

       இதுக்கு கடைசிலே வரேன்…..

     காச்யாம்து மரணான் முக்தி: ன்னா…காசியிலே போய் ஜீவனை விட்டா, மோக்ஷம்…இது நம் எல்லாருமே கேள்விப் பட்டுருக்கற சமாச்சாரம்தான்.

      ஸ்மரணே அருணாச்சலே…. சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணிண்ட முக்தின்னா….இங்கே அருணாசலேஸ்வரரை நினைச்சுண்ட தத் க்ஷணத்திலே (அந்த நிமிஷத்திலேயே) முக்தி.

       இப்போ கமலாலயம் சமாசாரத்துக்கு வருவோம்.

       ஜனநாத் கமலாலையே ன்னா திருவாரூர்லே பிறந்தால் முக்தி. அந்த ஓவியங்களைக் காட்டி, இவா -மூணு பேருமே திருவாரூர்லே பிறந்திருக்கா. அங்கே பிறந்ததுனாலேயே ஜீவன் முக்தாள் ஆய்ட்டா.

இப்போது என்னிடம்…..

         “ஆமா…உனக்கு ஒரு சமாசாரம் தெரியுமோ…..

         இந்த திருவாரூர்…நம்ப தஞ்சாவூர் ஜில்லாலதான் இருக்கு….

          ஆமாம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன்.

        அவா எந்த பாஷையிலே பாடி இருந்தாலும் அவா பிறந்த இடம் நம் தமிழ்நாடுதான். அப்படி பார்த்தா….சந்கீதத்தினுடைய பிறப்பிடமே நம் தமிழ் நாடுதான்னு சொல்லலாம் இல்லையா.( மீண்டும் ஆமாம் என்ற பாவனையில் தலை ஆட்டினேன்.)

    தமிழ் நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லை ன்னு சொல்லிடலாமே இல்லையா…..பாஷைங்கறது நம் மனசுலே நினைக்கறதை வெளிப் படுத்தற ஒரு கருவிதான். அதனாலே….அவா தமிழ்லே பாடலயேன்னு நாம் ஒண்ணும் வருத்தப் பட்டுக்க வேண்டாம்…..

    முதல் நாள் கல்லூரியில் நடந்த வாக்கு வாதத்திற்கு ஒரு அருமையான விளக்கம் நான் கேட்க்காமலேயே கிடைத்தது. பெரியவாளின் மேற்படி விளக்கத்தைக் கேட்டு நான் எப்படிப்பட்ட உணர்ச்சியில் இருந்தேன் என்பதை விவரிக்கத் தெரியவில்லை. என் கண்களில் கரகரவென்று கண்ணீர் வந்துவிட்டது.

       சங்கீத மும்மூர்த்திகள் பலவிதமான தெய்வங்களை பற்றிப் பாடி இருக்கிறார்கள். அது எந்த தெய்வத்தைப் பற்றி இருந்தாலும் ஒவ்வொரு முறை நான் பாடும் போதும் நான் நினைத்துக் கொள்ளும் ஒரே தெய்வம் நம் கருணைக் கடலாம் காஞ்சி மகான் ஒருவர்தான்.

Thursday, November 24, 2011

கருணை தெய்வம்

1964 ம் வருஷ ஆரம்பத்திலேயே மடத்துக்கு அரிசி மூட்டை உபயமளிப்பவர்களை, ராமேஸ்வரத்திலுள்ள நமது மடத்துக்கு அதனை அனுப்பும்படியாக பெரியவா கட்டளையிட்டு வந்தார்கள்.எதற்க்காக இப்படி அங்கே ஏகமாக ஸ்டாக் செய்ய சொல்கிறார் என்று மடத்து மானேஜருக்கு புரியவில்லை. இது விஷயமாக அவருக்கு பெரியவாளிடம் மனஸ்தாபமே வந்து விடுமோ எனும்படியான சந்தர்பங்கள் ஏற்பட்டதுண்டு. அனாலும் பெரியவா ஒரே பிடிவாதமாக கால் ஆயிரம் மூட்டைகளை ராமேஸ்வரத்தில் சேர்க்க செய்தார்.
அவ்வாண்டு டிசெம்பர் கடைசியில் ராமேஸ்வரத்தில் கடும் புயல் வீசிற்று, பாம்பன் பாலம் தகர்ந்தது. தனுஷ்கோடி மூழ்கியது. கடலின் கொந்தளிப்பை மீறி ராமேஸ்வரத்திற்கு உணவு பண்டம் அனுப்புவது இயலாத காரியமாயிற்று.
இந்த பயங்கர சூழலில், ராமேஸ்வரத்தில் சிக்கி கொண்ட ஆயிரமாயிரம் உதரம் நிறைய உதவி பண்ணியது....ஆம்......பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட 250 மூட்டை அரிசிதான்.

ஒரு தாயும் நாலு குட்டிகளும்

கார்த்திகை மாதம்,நல்ல குளிர்,விடியற்காலை,கோட்டை அடுப்பை
அடுப்பை மூட்டி, பெரியவாள் ஸ்நானத்துக்கு வெந்நீர் போட வேண்டும்.
அந்தப் பணியைச் செய்யும் ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பை
நோக்கிப் போனார்.ஒரு சொடுக்கில் அவரை அழைத்தார்கள்
பெரியவாள்.அவர் அருகில் வந்து நின்றார்.அரைகுறை வெளிச்சம்.
"இன்னிக்கு அடுப்பு மூட்ட வேண்டாம்..வெந்நீர் வேண்டாம்....."
வெந்நீர் வேண்டாம் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.ஆனால்,
அடுப்பை மூட்டாமல் நைவேத்யம் தயார் செய்ய முடியாதே?
பெரியவாள், திருவாரூர் வெங்கட்டராமய்யர் என்ற மற்றொரு
சமையல்காரரைக் கூப்பிட்டார்கள்.
"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ.....அதைப் பற்ற வை.
சுவாமி நைவேத்யம் அதில் பண்ணு...."..என்றார்கள்
மேல் முறையீட்டுக்கு இடமில்லாத உத்தரவுகள்.
காலை சுமார் ஏழு மணிக்கு'மியாவ்' என்று மெல்லிய குரல் கேட்டது.
கடவுளே! நைவேத்யத்தில் வாய் வைத்து விடப் போகிறதே!
சூ.......சூ.......ஒரு சலசலப்பும் இல்லை.
பூனை எங்கிருந்து குரல் கொடுத்தது?
ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பு அருகே சென்று பார்த்தார்.
ஒரு தாய்,நாலு குட்டிகள்..மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்தன,
கோட்டை அடுப்பின் கதகதப்பை அனுபவித்துக் கொண்டு.
"உச்ச மன்ற"த்தின் ஆணைக்குக் காரணம் இப்போது தெளிவாகத்
தெரிந்தது.
குளிர் தாங்காமல், பூனையும் குட்டிகளும் அங்கே வந்து படுத்துக்
கொண்டிருந்தன.அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து
வேறு எங்கே போகும்? குளிரில் நடுங்குமே?
"எனக்கு வெந்நீர் வேண்டாம்=பூனைகள் நன்றாகத் தூங்கட்டும்!."
ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.

ஜட்ஜ்மென்ட் வந்தாச்சு

தஞ்சாவூர் மாவட்டம் பதினெட்டு கிராம வாத்திமார் குடும்பம்.
செல்வச் செழிப்பு,ஈசுவர ஆராதனை,பெரியவாளிடம் பக்தி.
ஜாதகம் பார்த்து, பெண் பார்த்து,விமர்சையாக விவாஹம்
நடந்தேறியது. மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கை.
எந்த கிரகம் இடம் பெயர்ந்ததோ?
சாதரணமாகத் தோன்றிய கசப்பு, விவாகரத்து வரை வந்து விட்டது.
விசாரணைகள்,ஆலோசனைகள்,மறு ஆய்வுகள்....
ஊஹூம்.
நாளைக்குத் தீர்ப்பு.
பெண்ணும் பெற்றோரும், பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள்.
"காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ."
சிறிது நேரத்திற்குப் பின்னர் பையனும பெற்றோரும் வந்தார்கள்.
பெரியவருக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது.
"நாளைக்கு ஜட்ஜ் மேண்ட்...."
காமாக்ஷி தரிசனம் பண்ணிட்டு வாங்கோ..."
கோயிலில் ஏராளமான கூட்டம்.அத்துடன் பக்தி பூர்வமாகத்
தரிசனம் செய்யும் நிலையில் யாருமில்லை".பெரியவா
சொல்லிட்டா:அதனால் வந்தேன்..
‎[சற்று முன் அனுப்பிய கட்டுரையின் தொடர்ச்சி][ஜட்ஜ்மெண்ட் வந்துடுத்து]
ஸ்தானீகர் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத் தட்டைக் கொண்டுவந்தார்;
"சேர்ந்து வாங்கிக்கோங்கோ...."
சேர்ந்து?
"நான் தனியாகத்தான் வந்தேன்..."
சட்டென்று தலை நிமிர்ந்த போது, அவர்....அவள்...
"சேர்ந்து வாங்கிக்கோங்கோ...."மறுபடியும்!
காமாக்ஷியின் ஆணையா?
கோயிலிருந்து வெளியே வந்தபோது,இரண்டு குடும்பத்துப் பெரியவர்களும்
நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள்.பேசிக் கொண்டார்கள்.
விவாகரத்து, ரத்தாகி விட்டது.
காமாக்ஷியல்லவா ஜட்ஜ்மென்ட் கொடுத்திருக்கிறாள்.
பெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தார்கள்.
"ஜட்ஜ்மென்ட் வந்துடுத்து போலிருக்கே?"
எவ்வளவு புஷ்டியான சொற்கள்!
"எழுதினது, பெரியவா தானே!" என்று அந்த இளம் தம்பதி
நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா"..