Thursday, November 24, 2011

ஒரு தாயும் நாலு குட்டிகளும்

கார்த்திகை மாதம்,நல்ல குளிர்,விடியற்காலை,கோட்டை அடுப்பை
அடுப்பை மூட்டி, பெரியவாள் ஸ்நானத்துக்கு வெந்நீர் போட வேண்டும்.
அந்தப் பணியைச் செய்யும் ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பை
நோக்கிப் போனார்.ஒரு சொடுக்கில் அவரை அழைத்தார்கள்
பெரியவாள்.அவர் அருகில் வந்து நின்றார்.அரைகுறை வெளிச்சம்.
"இன்னிக்கு அடுப்பு மூட்ட வேண்டாம்..வெந்நீர் வேண்டாம்....."
வெந்நீர் வேண்டாம் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.ஆனால்,
அடுப்பை மூட்டாமல் நைவேத்யம் தயார் செய்ய முடியாதே?
பெரியவாள், திருவாரூர் வெங்கட்டராமய்யர் என்ற மற்றொரு
சமையல்காரரைக் கூப்பிட்டார்கள்.
"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ.....அதைப் பற்ற வை.
சுவாமி நைவேத்யம் அதில் பண்ணு...."..என்றார்கள்
மேல் முறையீட்டுக்கு இடமில்லாத உத்தரவுகள்.
காலை சுமார் ஏழு மணிக்கு'மியாவ்' என்று மெல்லிய குரல் கேட்டது.
கடவுளே! நைவேத்யத்தில் வாய் வைத்து விடப் போகிறதே!
சூ.......சூ.......ஒரு சலசலப்பும் இல்லை.
பூனை எங்கிருந்து குரல் கொடுத்தது?
ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பு அருகே சென்று பார்த்தார்.
ஒரு தாய்,நாலு குட்டிகள்..மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்தன,
கோட்டை அடுப்பின் கதகதப்பை அனுபவித்துக் கொண்டு.
"உச்ச மன்ற"த்தின் ஆணைக்குக் காரணம் இப்போது தெளிவாகத்
தெரிந்தது.
குளிர் தாங்காமல், பூனையும் குட்டிகளும் அங்கே வந்து படுத்துக்
கொண்டிருந்தன.அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து
வேறு எங்கே போகும்? குளிரில் நடுங்குமே?
"எனக்கு வெந்நீர் வேண்டாம்=பூனைகள் நன்றாகத் தூங்கட்டும்!."
ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.

No comments:

Post a Comment