Thursday, February 10, 2011

தமிழ் வாழ்கிறதா ? வீழ்கிறதா ? பரபரப்பு பட்டிமன்றம்

தமிழக முதல்வரைப் பாராட்டி ஒவ்வொரு வாரமும், மிழறிஞர்களும் அரசியல் பிரமுகர்களும் பட்டி மன்ற நிகழ்சிகள் நடத்துகிறார்கள். நம் பங்கிற்கு நாமும் கலைஞரைப் பாராட்டலாம் என்றால் அதற்கான வசதிகள்  நம்மிடம் இல்லை.
எனவே கற்பனையாக இங்கே ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை உருவாக்கி இருக்கிறோம்....
நடுவர் : தமிழ் பெருமக்களுக்கு வணக்கம்.இங்கே ஒரு அருமையான தலைப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. ‘தமிழ் வாழ்கிறதா? வீழ்கிறதா?’. எங்கும் தமிழ். எதிலும் தமிழ் என்ற இலக்கை நாம் அடைந்து விட்டோமா இல்லையா? இதுதான் கேள்வி. கலைஞர் வேறு. தமிழ் வேறு அல்ல. இன்றைக்கு தமிழ்நாட்டிலே எங்கு பார்த்தாலும் கலைஞரின் புகைப்படம்தான் தெரிகிறது. அதைப் பார்க்கும்போது, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற இலக்கை அடைந்து விட்டோம் என்பதிலே சந்தேகம் இருக்க முடியாது. இதற்காக தமிழன்னை நன்றி சொல்ல வேண்டியதே கலைஞருக்குத்தான். இருந்தாலும் நமது தமிழறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம். முதலில் ‘தமிழ் வீழ்கிறது’ அணித் தலைவரைப் பேச அழைக்கிறேன்.

தமிழறிஞர் : நடுவர் அவர்களே! கலைஞரைப் பற்றிப் பேசாமல் தமிழைப் பற்றிப் பேச முடியாது. அதுதான் தமிழின் பெருமை. ஆனால் அந்தப் பெருமையை இன்னும் சிலர் உணரவில்லை. இப்ப கூட பேப்பர்லே என்ன போடறான்? ‘ரேஷன் அரிசி கடத்தல்’னு போடறான். இதுதான் தமிழை வளர்க்கிற லட்சணமா? ‘நியாய விலைக் கடை அரிசி கடத்தல்’னு போட்டால்தான் தமிழ் வளரும் என்கிற பொறுப்புணர்வு யாருக்குமே இல்லை. ரேஷன் அரிசின்னு எழுதுகிற பத்திரிகை அதிபர்களை குண்டர்கள் சட்டத்தில் தள்ளினால்தான் தமிழ் வளரும்.

‘விழுப்புரம் அருகே ரயிலைக் கவிழ்க்க சதி’ன்னு செய்தி வரும்போது நமது தமிழ் ரத்தம் கொதிக்கிறது. ரயில்னு சொல்றதுக்கா கலைஞர் இத்தனை கோடி செலவழித்து மாநாடு நடத்துகிறார்? சிந்திக்க வேண்டும். ‘தொடர் வண்டியைக் கவிழ்க்கச் சதி’ன்னு எழுத மறுக்கும் தமிழ் விரோதப் போக்கை எப்படி மன்னிக்க முடியும்? அது மட்டுமா? ‘ஜெயிலில் கஞ்சா, செல்ஃபோன் பறிமுதல்’னு அடிக்கடி செய்தி வருது. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சியில் இப்படி செய்தி வருவது தமிழுக்குச் செய்யப்படுகிற துரோகம். இனியாவது ஏடுகள் திருந்தி, ‘சிறையில் போதை மருந்து, கைபேசிகள் பறிமுதல்’ என்று அழகு தமிழில் செய்தி வெளியிட வேண்டும். எனவே, தமிழ் வீழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறி, கலைஞரை வணங்கி என் உரையை நிறைவு செய்கிறேன்.

நடுவர் : அருமை, அருமை. நான் கூட, ‘மூட்டை மூட்டையாக ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிப்பு’ன்னு செய்தியைக் கேள்விப்பட்டு ஆடிப் போயிட்டேன். எங்கே போய்க் கொண்டிருக்கிறது தமிழ்நாடு என்ற அச்சம் பிறக்கிறது. ‘வெடிகுண்டு பொருட்கள்’னு நல்ல தமிழில் சொல்ல நாம் எப்போது கற்கப் போகிறோம்? எதிர் அணி தமிழறிஞர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

தமிழறிஞர் : நடுவர் அவர்களே, இன்றைய தினம் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு. குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்தால் தங்க மோதிரம் – என்றெல்லாம் அற்புதமான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிற ஆட்சி கலைஞரின் ஆட்சி. கடைகளுக்கு, தெருக்களுக்கு, பாலங்களுக்கு, கட்டிடங்களுக்கு தமிழ் பெயர்கள். மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். இதை விட தமிழனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்?

நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகணும்னு இப்ப சில பேர் கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா, ‘பராசக்தி’ படத்திலேயே நீதிமன்றத்தில் தமிழை ஒலிக்கச் செய்தவர் கலைஞர். சட்டசபையிலே கூட திருக்குறளைக் கூறிய பிறகுதான் எந்த அமர்க்களமும் அடிதடியும் அங்கே அரங்கேற முடியும். அதுதான் சட்டம். எனவே தமிழ் வாழ்கிறது என்று கூறி அமர்கிறேன்.



நடுவர் : தமிழ் வாழ்கிறதுன்னு ஆதாரங்களை அடுக்கி விட்டு அமர்ந்திருக்கிறார். உண்மைதான்யா. பத்திரிகைகளிலே முழுக்க முழுக்க ஆள் கடத்தல், நில மோசடி, கள்ள நோட்டு அச்சடிப்புன்னு தமிழ் வார்த்தைகளைப் பார்க்கும்போது, தமிழ் வளர்ந்திருக்குதுன்ற மகிழ்ச்சி ஏற்படுவதை மறுக்க முடியுமாய்யா? அடுத்த தமிழறிஞர் வருகிறார். வாங்கய்யா.

தமிழறிஞர் : நடுவர் அவர்களே...! நடுநிலையாப் பேசணும். பத்திரிகைகளிலே நாள் தவறாம, ‘செயின் பறிப்பு’ன்னுதான் போடறானே தவிர, ‘சங்கிலி பறிப்பு’ன்னு போடறானா? அந்தத் தமிழ்த் துரோகிகளுக்கு என்ன தண்டனை தரப் போகிறோம்? இதற்கா கலைஞர் ‘தொல்காப்பியப் பூங்கா’ எழுதினார்? ஆங்கில மோகம் அகற்றப்படணும்னா, ஆங்கிலப் பத்திரிகைகள், அத்துடன் தமிழ்மொழி பெயர்ப்பையும் இணைத்து விற்க வேண்டும்னு கலைஞர் சட்டம் கொண்டு வரணும். தமிழ் இணைப்பு இருக்கிறதா என்று மேயர் ஒவ்வொரு கடையிலும் சோதனை நடத்தினால்தான் தமிழ் வாழும். அதைக் கூட விடுங்க. இன்னைக்கு, ஊர் முழுக்க ‘டாஸ்மாக்,பார்’ன்னு தான் பேச்சு. இதைவிட வெட்கக் கேடு வேறென்ன வேண்டும் தமிழனுக்கு? ‘மதுபானக் கடை’ன்னு தமிழில் சொல்ல கூச்சப்படும் தமிழன், வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும்?

நடுவர் : தமிழ் வாழணும்னு நினைக்கிறவங்க, டாஸ்மாக்னு சொல்லாதீங்க; மதுபானக் கடைன்னு சொல்லுங்கன்னு ஒரு அற்புதமான கருத்தை கூறியிருக்கிறார். அந்த உயர்ந்த சிந்தனை கலைஞருக்கு இருக்கிற காரணத்தால்தான், ‘வாழிய வாழியவே’ என்ற அற்புதமான கருத்துடன் தமிழ் செம்மொழி கவிதையை முடித்திருக்கிறார். கலைஞரால் மட்டும்தான் அப்படி அறிவுபூர்வமாகச் சிந்திக்க முடியும். தமிழ் வீழவில்லை என்று வாதாட வருகிறார் அடுத்த தமிழறிஞர்.

தமிழறிஞர் : தமிழையும் கலைஞரையும் பிரிச்சுப் பாக்கறதாலேதான், தமிழ் வளரலைன்ற எண்ணம் சிலருக்கு வருது. எங்கும் கலைஞர், எதிலும் கலைஞர் திட்டம் நிறைவேறியிருக்குதா இல்லையா? அப்ப எங்கும் தமிழ், எதிலும் தமிழ் இருக்குதுன்னுதானே அர்த்தம்? நடுவர் அவர்களே, வள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை, கற்புக்கரசி கண்ணகிக்கு அதே இடத்தில் அதே சிலை, பாராட்டுக் கூட்டங்களை நடத்த வள்ளுவர் கோட்டம் – இவையெல்லாம் தமிழ் வாழ்வதைத்தானே காட்டுகிறது? கண்ணகி சிலையை நினைத்தாலே, கரண்ட் இல்லை என்ற கவலை மறந்து விடுமே. பத்திரிகைகளில் நாள்தோறும் ‘சிலப்பதிகாரமே... வாழும் வள்ளுவரே...’ போன்ற எண்ணற்ற தமிழ் விளம்பரங்களைக் காணும்போது ஏற்படுகிற மகிழ்ச்சியில் விலைவாசி உயர்வைப் பற்றி யாராவது நினைப்பார்களா? அதுதான் தமிழின் தனிச் சிறப்பு. எனவே தமிழ் வாழ்கிறது என்ற நியாயத் தீர்ப்பை வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.

நடுவர் : அருமையாச் சொன்னார், கரண்ட் போனா என்னய்யா? கண்ணகி சிலை இருக்குதேன்னு. இன்னைக்கு தமிழ்நாட்டிலே யாரும் ஃபைல்னு சொல்றதில்லை. கோப்புன்னுதான் சொல்றான். பஸ்னு சொல்றதில்லை. பேருந்துன்னுதான் சொல்றான். இதை விட என்னய்யா முன்னேற்றம் வேணும்? மறுத்துப் பேச வருகிறார் மற்றொரு தமிழறிஞர்.

தமிழறிஞர் : நடுவர் அவர்களே, தமிழ் உணர்வை ஏற்படுத்துவதில் நாம் வெற்றி அடைந்திருக்கிறோமா என்பதுதான் கேள்வி. சிறிய குழந்தைகள் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல்னுதான் பேசுது. இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல்னு, தூய தமிழில் கற்றுத் தர பெற்றோர்கள் தவறி விட்டார்கள் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இடைத் தேர்தல் சமயத்திலே ‘கவர்லே ரெண்டாயிரம்’ கொடுத்ததாகத்தான் செய்தி வருது. ‘உறையில் இரண்டாயிரம்’னு சொல்கிற வளர்ச்சியை நாம் இன்னும் அடையவில்லை. எனவே, தமிழ் வீழ்கிறது என்ற நல்ல தீர்ப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நடுவர் : ஸ்பெக்ட்ரம் ஊழல்னு ஆங்கிலத்திலேயே சொல்லிக்கிட்டிருந்தா எப்படிய்யா தமிழ் வளரும்னு நியாயமான கேள்வியை கேட்டிருக்கிறார். எதிர் அணி தமிழறிஞர் இதற்கு எப்படி பதிலடி கொடுக்கிறார்னு பார்ப்போம். வாங்க தமிழறிஞரே!
தமிழறிஞர் : கலைஞர் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு அழகாகச் சொன்னார். ஆனா எல்லோரும் கேக்கறாங்களா? சில பேர் கேக்கறதில்லை. அதனாலே தமிழ் வளரலைன்ற முடிவுக்கு நாம வந்துடக் கூடாது. தமிழகத்திலே பிறந்த எல்லோருக்கும், தமிழை வளர்க்கும் பொறுப்பு சம அளவில் இருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு கலைஞர் சொன்னது அதுக்காகத்தான். வள்ளுவருக்குக் கூட தோன்றாத சிந்தனை இது. எம்மொழி செம்மொழி அம்மொழி தமிழ் மொழி. தமிழின் பெருமையை இதைவிட சிறப்பாக யாராலும் எடுத்துக்காட்ட முடியாது. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் தமிழர்கள் கூட மகிழும் வகையில், தமிழ் வருடப் பிறப்பை தை மாதம் முதல் தேதிக்கு மாற்றியவர் கலைஞர். தமிழின் சுழற்சியையே மாற்றியவரின் ஆட்சியில் தமிழ் வாழாமல் இருக்குமா?

பேருந்தில் ஏறி கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும்போது கூட, கலைஞரின் தமிழ் பொன்மொழிகள் நம்மை வாழ்த்துகின்றன. அங்கும் தமிழ். அவ்வளவு ஏன்? தீவிரவாதத்தில் கூட தமிழ் தீவிரவாதம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்தவர் கலைஞர். எனவே, தமிழ் வாழ்கிறது என்பதுதான் உண்மை என்று கூறி விடைபெறுகிறேன்.

நடுவர் தீர்ப்பு : அடி, பின்னிட்டாருய்யா! தமிழ் வாழ்கிறதா வீழ்கிறதா? ஒரு அடிப்படையை நாம் மறந்து விடக் கூடாது. கலைஞர் வேறு, தமிழ் வேறு அல்ல. வள்ளுவன் வேறு, கலைஞர் வேறு அல்ல. கலைஞர்தான் கம்பன். ஆனால் தமிழ் வேறு, தமிழன் வேறு. தமிழனுக்கு இருக்கிற பிரச்சனைகள் தமிழுக்கு இல்லை. தமிழுக்கு மின்சாரம் தேவையில்லை. வேலை வாய்ப்பு தேவையில்லை. சட்டம் – ஒழுங்கு சீர்கேடு தமிழைப் பாதிக்காது. விலைவாசி உயர்வால் தமிழுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. எனவே, தமிழ் வாழ்கிறது. அதற்கு எந்தத் தடையும் இல்லை. தமிழனைப் போல் அவதிப் படாமல், அதுவாவது நிம்மதியாக வாழட்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்.

No comments:

Post a Comment