Thursday, February 10, 2011

சென்ஸஸ் கேள்விகளும், குடிமகன் பதில்களும் !

எதிர் வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சென்ஸஸ் அதிகாரிகள் ஒரு பெரிய கேள்விப் பட்டியலுடன் மக்களிடம் விவரம் சேகரிக்கத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது. சென்ஸஸ் கேள்விகளுக்கு, ஏராளமான பிரச்சனைகளுடன் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பஸ்தன் எப்படி பதிலளிப்பார் என்று சிந்தித்துப் பார்க்கிறோம்.
அதிகாரி : பெயர்?

குடிமகன் : பிச்சாண்டிங்க. அப்பா பேர் பக்கிரி. எதிர்காலத்திலே என் நிலைமை இப்படியிருக்கும்னு தெரிஞ்சு எங்கப்பா எனக்கு இந்தப் பேர் வெக்கலைங்க. தற்செயலா பொருத்தமா அமைஞ்சிடுச்சு. அவ்வளவுதான்.

அதிகாரி : தொழில்?

குடிமகன் : பெரும்பாலும் கடன் வாங்கறதுதாங்க. ரேஷன் க்யூவிலே நிக்கறது, ஸ்கூல், காலேஜ் அட்மிஷனுக்கு அலையறது, தண்ணிக்குத் திண்டாடறது, ஈ.பி. ஆஃபீஸ், ஆர்.டி.ஒ. ஆஃபீஸ்னு ஓடறது – இதுக்கெல்லாம் போக நேரம் இருந்தா வேலைக்குப் போறது உண்டுங்க.

அதிகாரி : குடும்பத் தலைவர்?

குடிமகன் : ரேஷன் கார்டுப்படி நான்தாங்க. மெதுவாப் பேசுங்க. சம்சாரம் காதுலே விழுந்தா ‘உடனே போய் மாத்திக்கிட்டு வா’ன்னு தகராறு பண்ணும்
 
அதிகாரி : சொந்த வீடு இருக்குதா?

குடிமகன் : ஐயோ, அந்தக் கஷ்டத்தை ஏன் கேக்கறீங்க? இப்படித்தான் என் ஃப்ரெண்ட் ஒருத்தர் பேங்க்லே லோன்வாங்கி சொந்த வீடு கட்டினார். மாசம் பன்னிரண்டாயிரம்னு ஏழு வருஷம் கட்டின பிறகும், அசல்லே 32 ரூபாய்தான் குறைஞ்சிருக்குது. என் அதிர்ஷ்டம், நான் இப்படியெல்லாம் மாட்டிக்கலை.

அதிகாரி : நிரந்தர முகவரி?

குடிமகன் : பிள்ளையார் கோவில் அரச மரத்தடி ப்ளாட்ஃபாரம்தாங்க. கரென்ட் இல்லாதப்ப எல்லாம் நாங்க அங்கேதான் போயிடறது. நீங்க எப்ப வந்தாலும் என்னை அங்கே பாக்கலாம். அங்கேதான் போயிட்டே இருக்கேன். வரீங்களா?

அதிகாரி : கடைசியா வசிச்ச இடம் எது? அங்கேயிருந்து இங்கே வர என்ன காரணம்?

குடிமகன் : மொதல்லே மேட்டுத் தெரு வீட்டுலேதான் இருந்தோம். அங்கே வாரத்துக்கு ஒரு தடவைதான் தண்ணி வரும். அதனால குறுக்குத் தெரு வீட்டுக்கு மாறினோம். ஆனா அங்கே பாருங்க, ஒரு சின்ன மழை பெஞ்சாக்கூட ஊர் தண்ணி மொத்தம் அங்கே வந்து சேர்ந்துடும். தண்ணீர் வடிய மூணு மாசம் ஆகும். போட் பிடிச்சுத்தான் வேலைக்குப் போகணும். அதனாலே இங்கே வந்துட்டோம்.

அதிகாரி : இங்கே எப்படி இருக்குது?
குடிமகன் : இங்கே ரெண்டு நாளைக்கு ஒரு தடவை தண்ணி கிடைக்கும். ராத்திரியிலே மட்டும்தான் கொசுத் தொல்லை தாங்க முடியாது. பகல்லே தாங்கற அளவுதான் இருக்கும். இந்த ஊர்லயே இதான் நல்ல ஏரியா.

அதிகாரி : சொத்து விவரம்?

குடிமகன் : ரெண்டு பையன், ஒரு பொண்ணு.

அதிகாரி : அதில்லைங்க. வீட்டுலே என்னென்ன பொருட்கள் இருக்குதுன்னு கேக்கறேன்?

குடிமகன் : ஓ... அதைக் கேக்கறீங்களா? டி.வி., கேஸ் சிலிண்டர், வேஷ்டி, சேலை. அடுத்த தேர்தல்லே இன்னும் நிறைய பொருட்கள் கிடைக்கும்னு நம்பறேன்.

அதிகாரி : வருமானம்?

குடிமகன் : வாங்கின கடன், வட்டி, அபராத வட்டி எல்லாம் பிடிச்சது போக, மீதி கையிலே என்ன கிடைக்குதோ அதுதாங்க வருமானம்.
அதிகாரி : வேறு வகை வருமானம்?

குடிமகன் : இடைத்தேர்தல் வந்தா கவர்லே ஆயிரம், ரெண்டாயிரம் கிடைக்கும். கட்சி ஊர்வலத்திலே கலந்துகிட்டு கோஷம் போட்டா, சாப்பாடு போட்டு பேட்டா குடுப்பாங்க.

அதிகாரி : குடும்பத்திலே வேறே யாருக்காவது வருமானம் இருக்குதா?

குடிமகன் : ஒரு பையனுக்கு, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு கிடைக்கிற உதவிப் பணம் கிடைக்குது. இன்னொரு பையன், ரேஷன் அரிசியை வாங்கி கடைக்கு வித்து, ப்ளாக்லே கொஞ்சம் சம்பாதிக்கிறான். பொண்ணு சத்துணவு கூடத்திலே வேலை செய்யறதாலே அரிசி, பருப்பு, முட்டை கொஞ்சம் கிடைக்கும். அதுவும் அங்கேயே சாப்பிட்டுக்கும்.

அதிகாரி : கடன் இருக்குதா?

குடிமகன் : ஏராளமா இருக்குதுங்க. அரசாங்கம் ரத்து பண்ணும்ன்ற நம்பிக்கையிலே விடாம வாங்கிட்டிருக்கேன்.

அதிகாரி : பிள்ளைகள் படிப்பு?
குடிமகன் : தனியார் பள்ளிக்கூடத்திலே ஃபீஸ், டொனேஷன், புஸ்தகம், நோட்டு வாங்கிக் கட்டுப்படியாகலைன்னு கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்த்தேன். அங்கே வாத்தியாருங்களே வரதில்லை. ட்யூஷன் படிச்சாத்தான் சொல்லிக் கொடுக்கறாங்க. அதனாலே பசங்க படிப்பை நிறுத்திட்டேன். ஒரு நாற்பது அம்பது பசங்களைப் பிடிச்சு, நானே ஒரு நர்ஸரி ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அப்புறம் பாருங்க, என் நிலைமை எப்படி மாறுதுன்னு!

அதிகாரி : குடும்பத்திலே இருக்கிற வசதிகள்?

குடிமகன் : பக்கத்திலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது ஒரு வசதிதாங்க. ஆனா, நான் அங்கே போறதில்லை. மீதி சில்லரையைக் கொடுக்க மாட்டேன்றாங்க. போலி மதுபானம் விக்கறாங்கன்னும் கேள்விப்பட்டேன். பக்கத்திலேயே ஒரு இடம் இருக்குதுங்க. ஒரிஜினல் கள்ளச் சாராயம் கிடைக்கும். ஒரு அவசரம்னா நான் அங்கேதான் போறது.

அதிகாரி : மின்சார வசதி?

குடிமகன் : ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் அரசாங்க உத்திரவுப்படியும், இன்னொரு நாலு மணிநேரம் அரசாங்க உத்திரவு இல்லாமயும் கட் பண்றாங்க. இந்த மின்வெட்டுகள் இல்லாத சமயத்திலே மின்சாரம் பழுதாயிடும். இந்த வசதிகளாலே, கரன்ட் பில் எங்களுக்குக் குறைவாத்தான் வருது.

அதிகாரி : பஸ் வசதி?

குடிமகன் : எக்ஸ்பிரஸ், ஸ்பெஷல், சூப்பர் டீலக்ஸ்னு காலியா நிறைய வருதுங்க. ‘நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி சாதா பஸ் எப்பவாவதுதான் வரும். ஆனா அதுலே ஏற முடியாது. நம்ம நேரம் நல்லாயிருந்தாத்தான் அது ஸ்டாப்பிங்லே நிக்கும்.
அதிகாரி : வாகன வசதி?

குடிமகன் : ஒரு சைக்கிள் இருக்குதுங்க. ஆனா டெலிஃபோன் டிபார்ட்மென்ட்காரங்க, ஈ.பி. ஆளுங்க, ரோடு போடறவங்க எல்லாரும் ஒரே சமயத்திலே பள்ளம் தோண்டிட்டு, ‘வேலை நடக்கிறது’ன்னு போர்டு போட்டுட்டு ஒரே சமயத்திலே லீவுலே போயிடுவாங்க. அதனாலே, சைக்கிளைத் தூக்கிட்டுத்தான் நான் வேலைக்குப் போறேன்.

அதிகாரி : கழிப்பிட வசதி?

குடிமகன் : வீட்டுக்குள்ளே படுக்கவே இடம் போதாது. கழிப்பிட வசதியெல்லாம் ஏது? வர்ற வருமானத்திலே ஒரு பகுதி கட்டணக் கழிப்பறைக்கே போயிடுது. நீங்கதான் கவர்ன்மென்ட் கிட்டே சொல்லி, அதையும் இலவசம்னு அறிவிக்கச் சொல்லணும்.

அதிகாரி : குடிநீர் வசதி?

குடிமகன் : மழைக் காலமாயிருந்தா ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணி வரும்ங்க. வெயில் காலத்திலே எப்ப தண்ணி வருதோ, அப்ப பிடிச்சு வெச்சுக்கணும். அப்பப்ப லாரியிலேயும் வரும். ஒரு குடம் ஒரு ரூபா.

அதிகாரி : கடந்த ஆண்டில் எப்போதாவது சும்மா இருந்தீங்களா?

குடிமகன் : விலைவாசி ஏறுது. கரென்ட் போகுது. ரோடு சரியில்லை. ரேஷன்லே ஏமாத்தறான். இதெல்லாம் பாத்துக்கிட்டு சும்மாத்தான் இருக்கோம். சண்டையா போட முடியும்?

அதிகாரி : குடும்பத்தில் பெரும்பாலும் பேசப்படும் மொழி?

குடிமகன் : பேச்சே கிடையாதுங்க. அவங்கவங்க டி.வி. பார்த்துகிட்டு, அவங்கவங்க வேலையைக் கவனிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்குது.

அதிகாரி : பத்திரிகை படிக்கிற வழக்கம் உண்டா?

குடிமகன் : முன்னே இருந்ததுங்க. எனக்கு ஹார்ட் கொஞ்சம் வீக். அதிர்ச்சியான விஷயம் எதையும் தாங்கற சக்தி இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். அதுலேர்ந்து பேப்பர் படிக்கிறதை நிறுத்திட்டேன்.

அதிகாரி : அருகாமையில் பள்ளிக் கூடம் இருக்கிறதா?

குடிமகன் : இருந்ததுங்க. பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலே டாஸ்மாக் கடை இருக்கக் கூடாதுன்னு மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணதாலே, அரசாங்கம் தலையிட்டு உடனே பள்ளிக்கூடத்தை வேறே இடத்துக்கு மாத்திடுச்சு.
அதிகாரி : தங்க நகைகள் இருக்கிறதா?

குடிமகன் : அதுவும் இருந்ததுங்க. என் சம்சாரம் ரொம்ப வருஷமா தாலியிலே கோர்த்து போட்டுக்கிட்டிருந்தது. போன மாசம்தான் ஒருத்தன் ஸ்கூட்டர்லே வந்து பறிச்சுட்டுப் போயிட்டான். புகார் குடுத்தாலும் போன பொருள் கிடைக்காது. ஸ்டேஷனுக்குத்தான் அலையணும். செயின் பறிப்புதான் தினமும் நடக்குதே. நாமதான் பார்த்துப் போகணும்.

அதிகாரி : வீட்டுலே யாருக்காவது வியாதி இருக்குதா?

குடிமகன் : சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் எல்லாம் வந்துட்டுப் போயிடுச்சுங்க. இந்த வருஷம் என்ன வியாதி வரப் போவுதுன்னு இனிமேதான் தெரியும்.

அதிகாரி : வியாதிக்கு சிகிச்சை வழங்கப்பட்டதா?

குடிமகன் : நாங்க ரொம்ப உஷாருங்க. அரசாங்க ஆஸ்பத்திரிக்கெல்லாம் போக மாட்டோம். புதுசா இன்னொரு வியாதியோட திரும்பணும். ஒரே வியாதியோட போகட்டும்னு அப்படியே விட்டுருவோம். தனியார் ஆஸ்பத்திரிக்கும் போறதில்லை. பாவம், அந்த டாக்டருங்க லட்சக்கணக்கிலே செலவு பண்ணி க்ளினிக் வெச்சிருக்காங்க. அந்த கோபத்தை நம்ம மேலே காட்டினா, தாங்க முடியுமா?

அதிகாரி : திருமண வாழ்க்கை பற்றி?
குடிமகன் : யோவ்! அந்த வயித்தெரிச்சலை ஏன்யா கிளப்பறே? சொன்ன வரைக்கும் குறிச்சுக்கிட்டு புறப்படுய்யா

1 comment:

ravichandran said...

again, another hilarious satire...gr8...
look forward to the next one..

Post a Comment