Sunday, February 6, 2011

சென்ற ஆண்டின் டாப் 10 படங்கள்

அரசியல் விமர்சனங்களை விரும்பும் வாசகர்களையும், சினிமா விமர்சனங்களை விரும்பும் வாசகர்களையும் ஒரே சமயத்தில் திருப்திப்படுத்தும் வகையில், 2010 -ல் வெளியான சிறந்த அரசியல் சினிமாக்களை வரிசைப்படுத்தியிருக்கிறோம்.
10. பையா
புதுமுகம் ஜெகன் மோகன் நடித்த படம் பையா. யாருக்கும் அடங்காத பையனாக நடித்திருந்தார், ராஜசேகர ரெட்டியின் பையன் ஜெகன்மோகன். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டால் என்னவாகும் என்ற கருத்தை வெளிப்படுத்தியது இப்படம். எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடாவிட்டாலும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை இப்படத்தின் மூலம் ஜெகன் மோகன் உருவாக்கி இருப்பதை மறுக்க முடியாது.
‘பையா, நான் சொல்வதைக் கேள்’ என்று அன்னை சோனியா எவ்வளவோ கெஞ்சியும், அடங்க மறுத்து ஜெகன் மோகன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படியாக இல்லாதது ஒரு குறை. ரோசையாவை ஜெகன் மோகன் பயமுறுத்தும் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தன. ‘ஐயோ என்னை விட்டு விடுங்கள்’ என்று கதறியபடியே நாற்காலியை தள்ளிவிட்டு ரோசையா ஓடும் காட்சி, நல்ல திருப்பம். ‘பையா’ பத்தாவது இடத்தைப் பிடிக்கிறது.
9 .வம்சம்
பெரிய வம்சத்தில் பிறந்த கோடீஸ்வரன், கதாநாயகன் ராகுல். நாட்டில் எங்கு பார்த்தாலும் குடிசைகளும் ஏழைகளும் இருப்பது அவரை வாட்டுகிறது. தனது கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா வழியில் தானும் வறுமையை ஒழிக்கப் போவதாக வம்சாவழி சபதம் போடுகிறார். ‘ஐயோ பாவம்’ என்று பரிதாபம் ஏற்படுகிறது நமக்கு. நாட்டிலுள்ள அனைத்து குடிசைகளிலும் நுழைந்து, சாப்பிட்டு சாப்பிட்டே ஏழ்மையை ஒழிக்க பாடுபடுகிறார். அவரது லட்சியம் நிறைவேறியதா என்பதை வம்சம் விளக்கியிருந்தது. இளைஞர்களைக் கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பதற்கு ஒரு சபாஷ் போடலாம். ஆர்.எஸ்.எஸ். பற்றி ராகுல் பேசும் வசனங்கள் சென்ஸாருக்குத் தப்பி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘35 லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டிக் காட்டுகிறேன்’ என்று ராகுலிடம் உறுதியளிக்கும் தங்கபாலு, அதற்கு பதில் 35 லட்சம் பேப்பர்களை அவர் முன் கொட்டும் காட்சி செம காமெடி. மீண்டும் மீண்டும் ஊர் பெரியவர் கருணாநிதியை அலட்சியப்படுத்தும் காட்சிகளில், ராகுல் வித்தியாசமான முத்திரையைப் பதித்திருந்தார். வரவேற்கத்தகுந்த முயற்சி என்பதால் ஒன்பதாவது இடத்தை பிடிக்கிறது ‘வம்சம்’.
8 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்
யாருக்கும் அடங்காத முரட்டுச் சிங்கமாக, வித்தியாசமான முறையில் வெளுத்துக் கட்டியிருந்தார் இளங்கோவன். ஆரம்பக் காட்சியில் வில்லன் கருணாநிதியிடம் மோதி விட்டு, மன்னிப்புக் கேட்கும்போது, அவரது பழைய படம் பார்த்தது போல் சப்பென்று ஆகிவிடுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு தனது பாணியை மாற்றிக் கொண்டு, கருணாநிதியைப் பார்த்து கர்ஜிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் புதுவிதமான முத்திரையைப் பதித்து, ரசிகர்களின் விசிலையும் கைதட்டலையும் பெற அவர் தவறவில்லை.
யாராவது அவரை அடக்கக் கூடாதா என்று டெல்லியிலிருந்து வருவோர் போவோரிடமெல்லாம் கருணாநிதி கெஞ்சுவது புன்னகையை வரவழைத்தது. கருணாநிதிக்கும் இளங்கோவனுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தங்கபாலு தவிக்கும் இடங்கள் படு தமாஷாகப் படமாக்கப்பட்டிருந்தன. டைட்டிலில் கூட இடம் பெறாத வாசனின் பின்னணி இசை, ஆர்ப்பாட்டமின்றி இருந்தது. இளங்கோவன் மீது கருணாநிதியின் ஆட்கள் டெல்லியில் புகார் செய்யும் காட்சியில் சோனியா எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இப்படத்தை எட்டாவது இடத்துக்கு தேர்வு செய்கிறோம்.
7 .போர்க்களம் .
எடியூரப்பா, குமாரசாமி, கவர்னர் ஆகிய மூவரும் எந்த இடத்தில் சந்தித்தாலும் அந்த இடமே போர்க்களமாகி விடுகிறது. மற்றபடி படத்தில் கதை என்று உருப்படியாக எதுவுமில்லாததால், யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை என்ற முடிவுக்கு நாம் வருகிறோம்.
‘என் ஆசை எதிராளியே’ என்று எடியூரப்பாவும் கவர்னரும் பாடும் திடீர் டூயட், கதையின் போக்கில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. எடியூரப்பாவை ஒழிப்பதற்காக ஆவேசத்துடன் வரும் கட்காரி, திடீரென்று அந்தத் திருமணக் காட்சியில் மனம் மாறி, அவரை கட்டிப் பிடித்து கொள்வது மற்றொரு மர்மமான திருப்பம்.
குமாரசாமியும் எடியூரப்பாவும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருந்தன. அதிலும் மூத்த வில்லன் நடிகர் தேவகௌடா, பற்களை நறநறத்தபடி ‘சாம தான பேத தண்டம் நான்கும் தோற்றுப் போகும்போது தகிடுதத்தம்’ என்று பாடுவது படு பயங்கரம். குமாரசாமி, தன் ஆட்களை பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு சூட்கேஸ்களுடன் உல்லாசப் பயணம் செய்யும் அவுட்டோர் காட்சி பிரம்மாண்டமான செலவில் படமாக்கப்பட்டிருந்தது. சிறந்த திகில் படத்தைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியதால், போர்க்களம் ஏழாவது இடத்தைப் பெறுகிறது.
6 . மாத்தியோசி
ராமதாஸும் அன்புமணியும் காமடி ரோலில் கலக்கியிருந்த படம் ‘மாத்தி யோசி’. எந்த முடிவை எடுத்தாலும், உடனே மாற்றி யோசித்து, அதற்கு எதிரான முடிவை எடுக்கும் வழக்கமான குணச்சித்திர ரோலை ஏற்றிருந்தார் ராமதாஸ். கண்கள் சிவக்க, தொண்டை நரம்புகள் புடைக்க, ‘நான் ஒரு முடிவெடுத்தா, உடனே அதை மாத்திடுவேன்’ என்று ராமதாஸ் ‘பஞ்ச் டயலாக்’ பேசி எச்சரிக்கும்போது அரங்கமே அதிர்கிறது.
கோபாலபுரத்துக்கும் போயஸ் கார்டனுக்கும் இடையே, ராமதாஸும் அன்புமணியும் நடக்கும் போது நிகழும் சம்பவங்கள்தான் கதை. ராமதாஸ், கனிவான பார்வையோடு கருணாநிதியை நெருங்கும்போதெல்லாம், ‘என் உச்சி மண்டையிலே விர்ருங்குது. கிட்டே நீ வந்தாலே கிர்ருங்குது’ என்று பாடியபடி கருணாநிதி பதறிக் கொண்டு ஓடுவது செம சிரிப்பு.
க்ளைமாக்ஸில் ராமதாஸும் அன்புமணியும் நடுத்தெருவில் அமர்ந்து கொண்டு எந்தப் பக்கம் போவது என்று யோசிக்கும்போது, ‘கோடானு கோடி வன்னியர்களுக்கு வழி காட்டும் இவர்களுக்கு வழி காட்ட யாரும் இல்லை’ என்று ஸ்லைடு போடுகிறார்கள். காமடியையும் உருக்கத்தையும் சம அளவில் கலந்து தந்ததால், ‘மாத்தி யோசி’ ஆறாம் இடத்துக்குத் தேர்வாகிறது.

5  .ரத்த சரித்ரம்
தீவிரவாதக் கூட்டத்தை கைது செய்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மன்மோகன் சிங், தீவிரவாதிகளைக் கண்டு கனவிலும் நனவிலும் எப்படி பயப்படுகிறார் என்பதை, ரத்த சரித்திரத்தில் தனக்கே உரிய பாணியில் இயக்கியிருந்தார் சோனியா.
தீவிரவாதச் சம்பவம் நடக்கும் ஒவ்வொரு காட்சியிலும், ‘இதை சகித்துக் கொள்ள மாட்டேன். பயப்பட மாட்டேன். ஆனா, அவங்க நம்ம ஆளுங்க. பேசத் தயாராக இருக்கிறேன். அச்சமளிக்கிறது’ என்று நடுங்கும் குரலில் மன்மோகன் சிங் தீவிரவாதிகளை எச்சரிக்கும் காட்சி அடிக்கடி வருவதால், ரசிகர்கள் கொட்டாவி விடுகின்றனர்.
‘உசுரே போகுது, உசுரே போகுது’ என்று விரக்தியோடு பாடும்போது, சோக ரசத்தைப் பிழிந்து தருகிறார் ஹீரோ மன்மோகன் சிங். பிடிபட்ட தீவிரவாதி கசாபுக்கு போலீஸார் சேவை செய்யும் காட்சியிலேயே, கதையின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டு விடுகிறார்கள். முதல் காட்சியில் அஃப்ஸல் குருவின் கருணை மனுவை பரிசீலிக்கத் தொடங்கும் பிரதிபா பாட்டீல், கடைசிக் காட்சி வரை பரிசீலித்துக் கொண்டே இருப்பது, சோனியாவின் குறும்பான டைரக்ஷன். வன்முறைக் காட்சிகள் நிறைந்த ரத்த சரித்திரம் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது.
4 .களவாணி
சென்ற ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட படம் காங்கிரஸ் ப்ரொடக்ஷன்ஸாரின் களவாணி. தனது நிறுவனத்தில் தன்னைச் சுற்றி தனக்கே தெரியாத களவாணிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையை, தன் பொறுப்பில் உள்ள உளவுப்படையிடம் ஒப்படைக்கிறார் சோனியா. உளவுப் படை அதை எப்படி நிறைவேற்றுகிறது என்பதுதான் கதை.
சோனியாவின் உதவியாளராக, கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருந்தார் மன்மோகன் சிங். ‘க்வாட்ரோக்கியை இன்னும் எத்தனை நாள் தேடுவீர்கள்? அவரை சித்ரவதை செய்வதற்கு அளவே இல்லையா?’ என்ற சத்தியாவேசக் குரலில் வெடிக்கும்போது, மாறுபட்ட குணச்சித்திரத்தைக் காட்டியிருந்தார். ஊழலைக் கண்டுபிடித்துத் தடுக்கும் பொறுப்பில் ஊழல் அனுபவம் மிகுந்த தாமஸை அமர்த்தும் காட்சியில் சோனியாவின் குறும்புத்தனமான டைரக்ஷன் டச் பளிச்சிட்டது. ‘ஊழலை சகித்துக் கொள்ள மாட்டேன்’ என்று சோனியா பொங்கி எழும்போது, தியேட்டரில் குபீர் சிரிப்பு எழுகிறது.
ஊழல் ஃபைல்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் காணாமல் போகும்போதே, கதையின் முடிவு புரிந்து விடுகிறது. களவாணி ராசாவா, கல்மாடியா, அசோக் சவானா என்ற சஸ்பென்ஸில் ரசிகர்கள் காத்திருக்க, அவர்களை மிஞ்சும் வகையில் செயல்பட்டு வெற்றிக் கொடியை நாட்டுகிறது சோனியாவின் உளவுப் படை. சிறந்த மர்மப் படமான களவாணி – நான்காம் இடத்தைப் பெறுகிறது.
3 . குரு சிஷ்யன்
குருவாக மன்மோகன் சிங்கும், சிஷ்யனாக ராசாவும் இணைந்து நடித்த வெற்றிப் படம் குரு சிஷ்யன். ஸ்பெக்ட்ரம் கம்பெனிக்கு மேனேஜராக ராசாவையும், சூபர்வைசராக மன்மோகன் சிங்கையும் நியமிக்கிறார் கம்பெனியின் எம்.டி. சோனியா. கம்பெனியின் பணத்தை ராசா எப்படி அசுர வேகத்தில் கபளீகரம் செய்கிறார், குற்றவாளிகள் கூட்டம் எப்படி தப்பிக்கிறது என்பதுதான் கதை. சிறந்த முறையில் ஸ்க்ரீன் ப்ளே அமைத்திருந்தார் டைரக்டர் சோனியா.
குருவுக்குத் தெரிந்து பாதியும், தெரியாமல் பாதியும் செய்து விட்டு, மொத்தப் பழியையுமே குருவின் மீது போடும் சிஷ்யனாக, கொடுக்கப் பட்ட வேலையைத் திறம்பட செய்திருந்தார் ராசா.மலையளவு ரூபாய் நோட்டுகளுக்கு நடுவே ராசாவும், அவரது நண்பர்களும் உருண்டு புரளும் காட்சி கிராஃபிக்ஸோ என்று ஒரு கணம் திகைக்கிறோம். ஆனால் அத்தனையும் உண்மையான நோட்டுக்கள்தான் என்று தெரியும்போது, நமது திகைப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.
போலீஸிடம் மாட்டும்போது, ‘எல்லாம் குருவுக்குத் தெரியும். குரு சொன்னபடிதான் செய்தேன்’ என்று குறும்பு கொப்பளிக்க ராசா சொல்லும் காட்சியில், மன்மோகன் சிங்கின் அப்பாவி முகத்தைப் பார்த்து பரிதாபப் படாதவர்களே இருக்க முடியாது. அது நடிப்பா, அதுதான் அவர் நிஜ முகபாவமா என்றே புரியாத அளவிற்கு நடிப்பில் சக்கை போடு போட்டிருந்தார் மன்மோகன் சிங். அதிலும் ராசாவின் முதுகில் தட்டிக் கொடுக்கிறாரே, பல பக்க வசனங்களை அந்த ஒரு தட்டுதல் மிஞ்சி விடுகிறது. குற்றவாளிகள் பிடிபட்டு விடுவார்கள் என்பதைப் போல் ரசிகர்களை நம்ப வைத்து, நைஸாக கதையை வித்தியாசமான பாதையில் திருப்புவது டைரக்டரின் திறமையைக் காட்டியது. எனவே மூன்றாம் இடத்தைப் பெறுகிறது ‘குரு சிஷ்யன்’.
2 .தில்லாலங்கடி
முழுக்க முழுக்க டெலிஃபோன் மூலமாகவே சொல்லப்பட்ட வித்தியாசமான மர்மக் கதை தில்லாலங்கடி. ஆன்டி ஹீரோயினாகத் தோன்றி, தனது தில்லாலங்கடிச் செயல்களின் மூலம் எதையும் சாதிக்க கூடிய சகலகலா வல்லியாக அசத்தியிருந்தார் நிரா ராடியா. அதிலும் அந்த 600 கோடி ரூபாய் ரகசியத்தை நிரா ராடியா உடைக்கும் காட்சியில் தியேட்டரே அதிர்ச்சியில் உறைந்து விடுகிறது. அப்போது கருணாநிதியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் என்னமாய் அப்பாவி நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்!
ராசாவுக்கு ஆதரவாக கனிமொழியும் நிரா ராடியாவும் பேசும் காட்சியில், மயிர்க் கூச்செறியச் செய்யும் வசனங்கள் படத்துக்குப் பெருமை சேர்க்கின்றன. கௌரவ நடிகராகத் தோன்றிய டாடாவிடமிருந்து இப்படியொரு மர்மமான நடிப்பை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. க்ளைமாக்ஸில், நிரா ராடியாவை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது ‘இது ஒரு டாடா தயாரிப்பு’ என்று அறிவித்து, படத்தின் கம்பீரத்தை உணர்த்துகிறார்கள். அரசியல் திரையுலகில் இதுவரை பார்த்திராத கதையமைப்பைக் கொண்டிருந்ததால், தில்லாலங்கடியை 2-வது இடத்திற்கு தேர்வு செய்கிறோம்.
1 . மகிழ்ச்சி
குடும்பப் பாசத்தின் சிறப்பை விளக்கிய நகைச்சுவை படம் மகிழ்ச்சி. டைட்டிலின்போது, பின்னணியில் ரூபாய் நோட்டுகள் மழையாகப் பொழிய, ‘அடடா மழைடா, அடை மழைடா’ என்று கலைஞரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு பாட, கணிசமான எதிர்பார்ப்போடுதான் அமர்கிறார்கள் ரசிகர்கள்.
கலைஞரே கதை வசனம் எழுதி இயக்கி நடித்திருந்த இப்படம், வசூலில் முந்தைய சாதனைகளை முறியடித்தது. குடும்பத் தலைவர் கலைஞர், தன் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் கதை.
‘ஏழையாகப் பிறந்தாலும் வசதியான குடும்பத்தில்தான் பிறந்தேன்’ என்று கலைஞர் சீரியஸாக் கூறும் போது தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. ‘நான் ஊழலுக்கு நெருப்பு’ என்ற பஞ்ச் டயலாக்கில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடுகிறது. அதிலும், அந்த சொத்துக் கணக்கு காட்டும் ஸீன் தூள். அவருக்கே உரித்தான குறும்பான நடிப்பு. ‘எனக்கு ஒரே ஒரு வீடு. அதையும் தானம் செய்து விட்டேன்’ என்று அந்த வீட்டில் இருந்தபடியே கூறும் ஒவ்வொரு முறையும் தியேட்டரில் ஏக கரகோஷம். வீரமணியின் பின்னணி இசை ஓவர்.
படம் முடியும்போது, ‘பிள்ளைகளை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி விட்டார். மகள்களை கோடீஸ்வரர்களாக்கி விட்டார். பேரன்களை சினிமா தயாரிப்பாளராக்கி விட்டார். உறவினர்கள் அனைவரையும் ஓஹோ என்று வாழ வைத்து விட்டார். ஆம்! ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டுவிட்டார்’ என்று கார்டு போடுவது சிந்தனையைத் தூண்டுகிறது. தலைசிறந்த குடும்பப் படமான ‘மகிழ்ச்சி’யை முதல் இடத்திற்கு தேர்வு செய்வதில் பெருமை கொள்கிறோம்!

3 comments:

ravichandran said...

amarkalam.....superb comments. Its gr8 to know that you have not lost the touch of satiric writing....gr8. keep it up... ravi, flushing, NYC

Unknown said...

Ha ha.., Good one..:-)

SV Dheva said...

Very nice, I will share with my friends.

Post a Comment