Sunday, February 6, 2011

விசாரணை அதிகாரிகளின் கேள்விகளும் அமைச்சரின் பதில்களும்

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா பதவி விலகியதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பாராளுமன்றக் கூட்டுக் குழு (ஜே.பி.சி.) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, எதிர்க் கட்சிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. எத்தகைய கேள்விக்கும் மனம் போன போக்கில் பதில் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு, விசாரிப்பது ஜே.பி.சி.யாக இருந்தால் என்ன? ஸி.பி.ஐ.யாக இருந்தால் என்ன? அப்படியே விசாரணை நடந்தால் மட்டும் போன 1.76 லட்சம் கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துவிடவா போகிறது? நமது கவலையெல்லாம் – குறைந்தபட்சம், நடத்தப்படுகிற விசாரணையாவது இப்படிக் கேலிக் கூத்தாக அமைந்து விடாமல், சற்று சீரியஸாக இருக்க வேண்டுமே என்பதுதான்.
 விசாரணை அதிகாரி : இதோ பாருங்க. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தாலே நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்குது....
ராசா : நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
வி.அதிகாரி : நாங்க இன்னும் கேள்வி கேக்க ஆரம்பிக்கலை. கேட்ட பிறகு பதில் சொன்னாப் போதும். இதுவரைக்கும் இவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததே இல்லை...
ராசா : தேங்ஸ்.
கருணாநிதி : எங்களுக்கு எதிரா பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் திட்டமிட்டு, மனு சாஸ்திரத்தில் கூறியபடி நடந்து கொண்டதுதான் அதுக்குக் காரணம். இதோ, கழக ஆட்சிக்கு எதிரா மனு தர்மத்திலே என்ன எழுதியிருக்குதுன்னு மானமிகு வீரமணி கொடுத்த குறிப்புகளைக் கையோட கொண்டு வந்திருக்கேன். படிச்சுப் பார்த்துட்டு, விசாரணையை இந்த அளவிலே நிறுத்திக்கலாம்.
வி.அதிகாரி : அதையெல்லாம் படிக்க இப்ப நேரமில்லை. தயவு செஞ்சு, கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செஞ்சதுதான் இவ்வளவு பெரிய நஷ்டத்துக்குக் காரணம்...
கருணாநிதி : விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகத்தான் இதைப் பார்க்கணும். விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்போது, மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சரே எப்படி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு அதிக விலையை நிர்ணயிக்க முடியும்?
வி.அதிகாரி : அரசுக்கு வருவாய் குறைந்து விட்டதே என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வெளிப்படையாக நடக்கணும்னு பிரதமர் கொடுத்த அறிவுரையை மதிக்காமல் செயல்பட்டது ஏன்?
ராசா : பிரதமர் அறிவுரையை மதிக்க மாட்டேன்னு பிரதமர் கிட்டே நான் முதல்லேயே சொல்லிட்டேன். அவர் அனுமதியோடதான் அவர் அறிவுரையை மீறினேன். நான் அவர் அறிவுரையை மீறிட்டேன்னு அவருக்கும் தெரியும்.
வி.அதிகாரி : ஏலம் மூலமாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படணும்னு சட்ட அமைச்சகமும், நிதி அமைச்சகமும் வழங்கிய ஆலோசனையையும் அலட்சியப்படுத்தியிருக்கீங்க.
ராசா : அது என் கொள்கை முடிவு. அலட்சியப்படுத்திட்டு நான் சும்மா இருந்துடலை. அதையும் பிரதமர் கிட்டே சொல்லிட்டேன். நான் பிரதமர் கிட்டே சொன்னதும் பிரதமருக்குத் தெரியும். அதனாலதான் சொல்றேன். நான் எந்தத் தப்பும் செய்யலை.
வி.அதிகாரி : உயர் அமைச்சர்கள் குழுவைக் கலந்தாலோசித்த பிறகே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை விற்கணும்னு சொல்லப்பட்ட யோசனையையும் நீங்க புறக்கணிச்சிருக்கீங்க.
ராசா : எனக்கு முன் இருந்த மந்திரி அவர் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டதுக்கான ஆதாரம் ஃபைல்லேயே இருக்குது. அவர் வழியிலேதான் நான் செயல்பட்டேன். ஆகவே, இதில் விதிமீறல் ஏதும் இல்லை.
வி.அதிகாரி : நீங்க சொல்றதிலேர்ந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலே நீங்க முறைகேடா நடவடிக்கை எடுத்திருக்கீங்கன்னு தெரியுதே?
கருணாநிதி : ஒரு தலித் எப்படி முறைகேடுகளில் ஈடுபட முடியும்? எந்த தலித்தும் உங்கள் வாதத்தை ஏற்க மாட்டார்கள்.
வி.அதிகாரி : குற்றச்சாட்டு ஜாதி சம்பந்தப்பட்டது இல்லை.
கருணாநிதி : ஒரு தலித் மீது குற்றம் சாட்டிவிட்டு, குற்றச்சாட்டையும் ஜாதியையும் பிரித்துப் பார்த்து தப்பிக்க நினைக்காதீர்கள். எதிர்கால சமுதாயம் உங்களை மன்னிக்காது. இதுக்கும் மனுதர்மத்திலே விளக்கமான ஆதாரம் இருக்குது. இதோ பாருங்க...
வி.அதிகாரி : அதை அப்புறம் பார்க்கலாம். ஏல முறையை தவிர்த்து விட்டு, ‘முதலில் வருபவர்களுக்கு முதலில்’ என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது ஏன்? தயவு செஞ்சு ஜாதியை சம்பந்தப்படுத்தாம பதில் சொல்லுங்க.
கருணாநிதி : இப்படியெல்லாம் கடுமையா நிபந்தனை விதிச்சா எப்படி பதில் சொல்ல முடியும்?
ராசா : முதலில் வருபவர்க்கு முதலில்னு கொடுக்காம, கடைசியில் வருபவர்க்கு முதலில்னா கொடுக்க முடியும்? அப்படிக் கொடுத்திருந்தாத்தானே தப்பு? நீங்க முதல்லே வந்திருந்தாக் கூட, உங்களுக்குத்தான் கொடுத்திருப்பேன்.
கருணாநிதி : முதலில் வருபவர்களை ஏமாற்றி விட்டு, பின்னால் வருபவர்களுக்கு வழங்க எங்களால் முடியாது. அண்ணா எங்களை அப்படி வளர்க்கலை.
வி.அதிகாரி : கேள்வியை நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை. சரி விடுங்க. முதலில் வந்தவர்க்கு முதலில் என்கிற முறையையும் கூட நீங்க சரியாப் பின்பற்றலை. ஏற்கெனவே பெறப்பட்டிருந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கத் தவறியது ஏன்?
ராசா : அவை ஏற்கெனவே வந்து விட்டவை. எனவே முதலில் வந்தவை என்ற தகுதியை அம்மனுக்கள் பெற முடியாது.
வி.அதிகாரி : தகுதியே இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்குது.
ராசா : என் கைக்கு முதலில் கிடைத்த விண்ணப்பம் என்ற தகுதியின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
வி.அதிகாரி : டெலிகாம் துறைக்கு தொடர்பே இல்லாத நிறுவனங்களுக்குக் கூட அனுமதி வழங்கப்பட்டது ஏன்?
கருணாநிதி : தொடர்பு இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அனுமதி வழங்கப்பட்ட உடனேயே, அந்நிறுவனத்துக்கு தொலைத் தொடர்புத் துறையுடன் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.
வி.அதிகாரி : விண்ணப்பம் பெறும் கடைசி தேதியை முதலில் 1.10.2007 என்று அறிவித்து விட்டு, பிறகு 25.9.2007தான் கடைசி நாள் என்று மாற்றியது ஏன்?
ராசா : எதிர்பார்த்த மனுக்கள் வந்து விட்ட பிறகு, தேவையில்லாத மற்ற மனுக்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
கருணாநிதி : விரைந்து செயல்படுவதற்குக் கூட உள்நோக்கம் கற்பிக்கிற அளவுக்கு உங்களுக்கு ஜாதி துவேஷம் இருப்பது உள்ளபடியே எனக்கு அதிர்ச்சி அளிக்குது. பெரியார் தமிழ்நாட்டில் நூறாண்டு வாழ்ந்ததே வீண்தானா என்கிற கவலையே மேலிடுகிறது.
வி.அதிகாரி : அனுபவமே இல்லாத புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி.
கருணாநிதி : 1967-லே ஆட்சிக்கு வந்தபோது அண்ணா கூட முதல்வர் பதவிக்கு புதியவர்தான். புதியவர்னு பாக்காம தமிழக மக்கள் அண்ணாவை அரியணையில் அமர்த்தலையா? தம்பி ராசா அந்த வழியில் செயல்பட்டது கூட தவறா?
வி.அதிகாரி : 2001 விலை மதிப்பீட்டின் அடிப்படையிலே, 2008-ல் விற்பனை செய்தால் அரசுக்கு நஷ்டம் வரும்னு உங்களுக்குத் தெரியாதா? நஷ்டத்துக்குக் காரணமே இந்தப் பழைய விலைதானே? ஏன்பழைய விலைக்கு ஒதுக்கீட்டை விற்பனை செஞ்சீங்க?
ராசா : புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் தப்புன்றீங்க. பழைய விலைக்கு வித்தாலும் தப்புன்றீங்க. உங்களுக்கு புதுமையும் பிடிக்கலை. பழமையும் பிடிக்கலைன்னா அதுக்கு நாங்க என்னதான் பண்ண முடியும்?
வி.அதிகாரி : உங்கள் மூலம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற நிறுவனங்கள் குறுகிய காலத்தில், அதை வேறு நிறுவனங்களுக்கு விற்று, கொள்ளை லாபம் பெற்றிருக்கின்றன. இதிலிருந்தே நீங்கள் எவ்வளவு அடிமாட்டு விலைக்கு விற்றிருக்கிறீர்கள் என்பது புரியவில்லையா?
கருணாநிதி : பல கோடீஸ்வரர்களை மத்திய அரசு உருவாக்க தம்பி ராசா காரணமாக இருந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதானே? கோடீஸ்வரர்களின் சிரிப்பில் கூட்டணியைக் காண்கிறோம் என்கிற புதிய முழக்கம்தான் என் சிந்தையில் தோன்றுகிறது.
வி.அதிகாரி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை விற்பனை செய்ய நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்ட விரோத மானவை என்பதை, முன்பே சுட்டிக் காட்டியதாக டெலிகாம் துறையின் முன்னாள் செயலாளரே புகார் கூறியிருக்கிறார்.“ இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
கருணாநிதி : என்ன சொல்வது? குத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்டதுதானே எங்கள் முதுகு? அப்படிப்பட்டதுதானே எங்கள் ஜாதகம்?
வி.அதிகாரி : இதுவரை எந்தக் கேள்விக்குமே நீங்க நேரடியா பதில் சொல்லாததால்....
கருணாநிதி : அம்மையார் மட்டும் கூறியிருக்கிறாரா?
வி.அதிகாரி : ...ஸ்பெக்ட்ரம் விற்பனையை ரத்து செஞ்சுட்டு, புதிதாக விற்கணும்னு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய...
கருணாநிதி : தாராளமாகச் செய்யலாம். எப்படியும் இதே கூட்டணிதான் தொடரப் போகுது. ராசாவே மறுபடியும் அமைச்சராயிடுவார். அவரே முன்னின்று மறுவிற்பனை செஞ்சு மேலும் பல கோடீஸ்வரர்களை உருவாக்கத் தயாராக இருக்கிறார்.

No comments:

Post a Comment