Tuesday, May 17, 2011

சில்பியின் இல்லத்துக்கு வருகை தந்த பெரியவா

 
 ஸ்ரீ பெரியவாளின் பரிபூர்ண ஆசியோடும் அருளோடும் விகடனில் ஆலயங்களையும், தெய்வப்படங்களையும் வரைந்து, ஈடு இணையற்ற ஓவியராகத் திகழ்ந்த ‘சில்பி’, மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில்பெரியவாளைத் தரிசித்த போதெல்லாம் தம் இல்லத்துக்கு வருகை தர வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருப்பார்.  பெரியவாளும் ‘சரி’ என்பதுபோல் புன்முறுவலுடன் தலையசைப்பது வழக்கம்.
 
ஒரு நாள் அதிகாலையில் சாந்தோம் கடற்கரையில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு,  பெரியவா கச்சேரி ரோடில் வந்து கொண்டிருந்தார்.  திடீரென்று அருண்டேல் ரோடு திருப்பத்தில் நின்று,  ‘இங்கேதானே ‘சில்பி’ வீடு இருக்கிறது?’  என்று கேட்க அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு ?  விசாரி ‘ என்று கூறவே, நாங்கள் ஒவ்வொரு வீடாக விசாரித்துக் கொண்டிருந்தோம்.  அதற்குள் பெரியவா ஒரு வீட்டுக்கு முன் வந்து நின்று ‘இதுவா பாரு ?’  என்றதும்,  உள்ளே சென்று விசாரித்தேன்.  ஆம்.  அதுவேதான்!  அப்போது ‘சில்பி’யின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.  ‘சில்பி’  வெளியூர் சென்றிருந்தார்.
சில்பியின் அம்மாவுக்கு கையும் ஓடவில்லை.  காலும் ஓடவில்லை. பெரியவா நேரே பூஜையறைக்குச் சென்றார்.  பின்னர், கூடத்தில் வந்து அங்கு மாட்டியிருந்த படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு புறப்பட்டார்.  அப்போது ‘சில்பி’யின் அம்மா,  ‘எனக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருக்கு.  ரொம்பக் கஷ்டப்படறேன்’  என்று கூறினார்.  பெரியவா உடனே,  ‘தினம் இரண்டு வில்வ தளம் சாப்பிட்டுண்டு வாங்கோ’  என்று வைத்தியம் சொன்னார்.
சில்பி ஊரிலிருந்து திரும்பியதும்,  ‘பெரியவா வீட்டுக்கு வந்த போது தாம் இல்லாமல் போய்விட்டோமே’  என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.  பெரியவாளைத் தரிசித்தபோது,  வீட்டுக்கு வந்ததைக் குறித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டு,  பெரியவாவந்து விட்டுப் போன சமயம் தான் வீட்டில் இல்லாமல் போனதற்கு வருத்தத்தையும் தெரிவித்தாராம்.  அப்போது பெரியவா சிரித்துக் கொண்டே,  ‘நீ ஆத்துக்கு வரணும்,  ஆத்துக்கு வரணும்’ னுதான் கூப்பிட்டுண்டிருந்தே.  நான் ஆத்திலே இருக்கறப்ப வாங்கன்னு கூப்பிடலையே’  என்றாராம்.

No comments:

Post a Comment