Monday, February 28, 2011

இந்தியா விற்பனை – திடுக்கிடும் தணிக்கை அறிக்கை!

ஒரு அரசியல் ஜோதிடம்  

மாபெரும் ஊழல்!

டெல்லி:

இதுவரை நடந்திராத அளவிற்கு பெரிய ஊழல், மத்திய அரசில் நடந்திருப்பதை, மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை, வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

தனியார் கம்பெனி!

இந்தியாவை, தனியார் கம்பெனிக்கு விற்பதற்கு, மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், தணிக்கை அறிக்கை கூறுகிறது.

இரண்டாயிரம் கோடி!

இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியாவை டுபாகூர் ஃபைனான்ஸியர்ஸ் என்ற தனியார் கம்பெனிக்குத் தந்துவிட, மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால் நாட்டு மக்களுக்கு, மொத்தமாக பத்து கோடி கோடி ரூபாய் நஷ்டம் என்று தணிக்கை அறிக்கை கூறுகிறது. இந்த விற்பனை ஒப்பந்தம், வருகிற பாராளுமன்றக் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராபர்ட் க்ளைவ் காட்டிய வழி ! – காங்கிரஸ் கருத்து

டெல்லி:

இந்தியாவை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாத நிலையில், இந்தியாவை விற்க ஒப்பந்தம் போட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று மத்திய அரசு சார்பாக, காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்க்வி கூறியிருக்கிறார்:
‘ராபர்ட் க்ளைவ் காலத்தில், இந்தியாவை விற்க கிழக்கிந்தியக் கம்பெனியால் என்ன விலை பேசப்பட்டதோ, அதே விலைதான் இப்போதும் ஒப்பந்தமாகியிருக்கிறது. ‘யார் கேட்டாலும் கொடுப்பேன்’ என்று ராபர்ட் க்ளைவ் எடுத்த முடிவைத்தான், இப்போது அரசும் எடுத்திருக்கிறது. ஆகையால், முன்னோடியின் வழியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில், எதிர்க் கட்சியினர் குற்றம் காண்பது வெற்று அரசியல்.’

ரகசியம்!

‘அன்று ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காத கட்சிகள், இன்று ஆர்ப்பாட்டம் செய்வது, உள்நோக்கம் கொண்டது’ என்றும் அவர் கூறினார். இதையடுத்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

நிருபர் : பிரதமரின் ஒப்புதலுடன்தான், இந்திய விற்பனை ஒப்பந்தம் மத்திய அரசினால் செய்யப்பட்டதா?

அபிஷேக் : இது பா.ஜ.க. கிளப்பி விடுகிற புரளி. பிரதமருக்கும், மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? வேண்டுமென்றே இதில் பிரதமரை தொடர்புபடுத்தி, அவரை அவதூறு செய்ய, மதவாத சக்திகள்தான் முயற்சிக்கின்றன.

அடுத்து, சில பத்திரிகையாளர்கள், ‘நாட்டை விற்றாகி விட்டதா?’ என்று கேட்டதற்கு, காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்க்வி ‘அரசாங்க ரகசியங்களை வெளியிடுவது தவறு. அந்த மாதிரி பொறுப்பற்ற செயல்களை காங்கிரஸ் செய்யாது’ என்று கூறினார்.

‘நாட்டை விற்க இவர்கள் யார்?’

டெல்லி:

நாட்டை விற்பதற்கு, காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த நாடு, காங்கிரஸிற்கோ, மன்மோகன் சிங் ஆட்சிக்கோ சொந்தமல்ல. மக்களுக்குச் சொந்தமான இந்த புண்ணிய பாரத பூமியை, தனியாருக்கு விற்பது என்பது, மோசடி வேலை. பலவீனமான பிரதமர் இருப்பதால்தான் இப்படி நடக்கிறது’ என்றார்.

ஆவேசம்!

பத்திரிகையாளர் ஒருவர் ‘சரி. யாரைக் கேட்டு நாட்டை விற்பது?’ என்று கேட்டதற்கு, அத்வானி ‘எங்களைக் கேட்டிருக்கலாமே!’ என்று பதில் அளித்தார்.

‘எங்களைக் கேட்டிருந்தால், பாகிஸ்தானை வாங்குவதற்கு நாங்கள் வழி சொல்லியிருப்போம்’ என்று அருகில் இருந்த சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். ‘நாடு விற்கப்பட்டாலும், என்ன விலை கொடுத்தாவது, அடுத்து வருகிற பா.ஜ.க. ஆட்சி, நாட்டைத் திருப்பி வாங்கும்’ – என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.

ஸ்வாமி அதிர்ச்சி தகவல்!

டெல்லி:
பெரும் தொகையைக் கமிஷனாகப் பெற்றுக் கொண்டுதான் காங்கிரஸ் நாட்டை விற்க ஒப்பந்தம் செய்தது – என்று சுப்ரமண்யம் ஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார். ஒரு டெலிவிஷன் சேனலுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: ‘பத்து கோடி கோடி ரூபாய் நஷ்டம் என்று தணிக்கை அதிகாரி கூறியிருக்கிறார். ‘ஒரு இந்தியரின் விலை பத்து லட்ச ரூபாய் என்று வைத்துக் கொண்டால், பத்து கோடிகோடி  ரூபாய் இந்நாட்டின் விலையாகிறது. (10,00,00,000,00,00,000 ரூபாய்) அதைப் பெறுவதற்கு ஒப்பந்தம் வழி செய்யாமல், வெறும் இரண்டாயிரம் கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறது’ என்பதை தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிரதமருக்குத் தெரியாது

‘பத்து கோடிகோடி ரூபாயில், இரண்டாயிரம் கோடி ரூபாய் போக, மீதித் தொகை கமிஷனாகப் பெறப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்பது கோடியே, தொன்னூற்று ஒன்பது லட்சத்து, தொன்னூற்று எட்டாயிரம் கோடி ரூபாய் கமிஷன் கைமாறியிருக்கிறது. இதில் சோனியா காந்திக்கு 33 1/3 சதவிகிதமும், ராகுல் காந்திக்கு 33 1/3 சதவிகிதமும், கூட்டணிக் கட்சிக்கு 33 1/3 சதவிகிதமும் பங்கு போடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கிற்கு இதில் சம்பந்தமில்லை. நாட்டை, மத்திய அரசு விற்றுவிட்ட விஷயம் பிரதமருக்குத் தெரியாது. இது தொடர்பாக, மத்திய அரசின் மீது நான் வழக்கு தொடரப் போகிறேன்’.

ஜனாதிபதி!

இவ்வாறு கூறிய ஸ்வாமி, மத்திய அரசில் பிரதமர் தவிர மற்ற அனைவர் மீதும் வழக்குத் தொடுக்க, ஜனாதிபதியிடம் அனுமதியைக் கோரபோவதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஜனாதிபதி, தன்னை சந்திக்க சுப்ரமணியம் ஸ்வாமி வந்தால், அவரை வாசலிலேயே நிறுத்தி, அவர் கொடுக்க வந்த கடிதத்தை கசக்கி வெளியே வீசி விடுமாறு, தன்னுடைய மெய்க்காப்பாளருடைய, டிரைவரின் சினேகிதருடைய மகன் வீட்டு சமையல்காரரிடம் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

பாராளுமன்றத்தில் ரகளை

டெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று பெரும் ரகளை நடந்தது. யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை. நாடு விலை போகிற ஊழல் பற்றி ஒரு கேள்வி எழுப்பியே தீருவோம் என்று எதிர்க் கட்சிகள் பிடிவாதம் பிடித்தன. இந்த சமயத்தில், இது தொடர்பான கேள்வி தேவையில்லை என்றும், பதில் மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு கூறிவிட்டது. கேள்வி இடம் பெற்றே தீர வேண்டும் என்பதில் எதிர்க் கட்சிகள் பிடிவாதம் காட்டியதால், பெரும் ரகளை நடந்தது. சபாநாயகர், சபையை ஒத்தி வைத்தார்.

நிதி அமைச்சரின் கோபம்

‘கேள்வி கேட்பதால் ஒரு பயனும் இல்லை என்று இத்தனை வருட பாராளுமன்ற அனுபவத்திற்குப் பிறகும், எதிர்க் கட்சிகள் உணர மறுப்பது, ஜனநாயகத்தையே கேலி செய்கிற மாதிரி இருக்கிறது’ – என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ‘அரசு சொல்கிற பதிலை ஏற்க மறுத்து, கேள்வி கேட்போம் என்று பிடிவாதம் பிடித்து, பாராளுமன்றத்தை முடக்கி, ஜனநாயகத்தை நசுக்கி, தேச நலனையே கசக்குகிற எதிர்க் கட்சிகள், மனம் திருந்தி, கேள்வியை விட்டு, பதிலை ஏற்று, சபைக்கு வர வேண்டும்’ என்று கோபமாகக் கூறினார்.

‘அவர்கள் வராவிட்டால் சபை நடக்காது’ என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார்.

‘கேள்வி கேட்க விடாமல், பதிலை அளிக்கிறோம் என்று அரசு தரப்பு கூறுவது, உலக பாராளுமன்ற முறையில் கேள்விப்படாத ஒன்று’ என்று அருண் ஜேட்லி கூறினார். ‘கேள்வி இல்லாமல் பதில் மட்டும் வந்தால், உண்மைகளை மறைக்க வசதியாக இருக்கும் என்பதால், அரசு இந்த உபாயத்தை கையாள்கிறது’ என்று விளக்கினார் அருண் ஜேட்லி.
காங்கிரஸின் பொய்ப் பிரச்சாரம்!

பா.ஜ.க.வை நாங்கள் ஆதரிக்கவில்லை! (சீதாராம் யெச்சூரி)

மார்க்ஸிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ‘கேள்வி கேட்டுத்தான் தீருவோம் – என்ற பா.ஜ.க.வின் நிலையிலிருந்து நாங்கள் மாறுபடு கிறோம். கேள்வி கேட்கப்பட்டே ஆக வேண்டும் – என்பதுதான் எங்கள் நிலை; ஆகையால்தான் பாராளுமன்றத்தை நாங்கள் புறக்கணிக்கிறோமே தவிர, பா.ஜ.க. போல கேள்வி கேட்டே தீருவோம் என்று நாங்கள் கூறவில்லை. மதச்சார்பு அரசியலுடன் நாங்கள் ஒத்துப் போவதாக, காங்கிரஸ் கூறுவது – பொய்ப் பிரச்சாரம் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்’ – என்று விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கம், நிருபர்களுக்கு தெளிவு ஏற்படுத்தியதாக, பின்னர் ஒரு மூத்த நிருபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

துண்டு துண்டாக விற்கலாமா? – கபில் சிபல் கேள்வி
இந்தியாவை விற்கிற ஒப்பந்தம் பற்றி, மத்திய அமைச்சர் கபில் சிபல் இன்று விளக்கம் அளித்துள்ளார். ‘இந்தியாவை விற்பதால் யாருக்கு நஷ்டம் என்று எதிர்க் கட்சிகளினால் சொல்ல முடியுமா? இப்போது இந்தியா விற்பனை ஆகாமல் இருப்பதால், எதிர்க்கட்சிகளுக்கோ, ஒரு குடிமகனுக்கோ, என்ன லாபம் இருக்கிறது? ஒரு லாபமும் இல்லை. ஆக, ஒரு லாபமும் இல்லாத வஸ்துவை விற்பதில் என்ன நஷ்டம் வர முடியும்?

லாபம்!

‘இதனால்தான், தணிக்கை அதிகாரியின் அறிக்கை மிகவும் தவறானது என்று நான் சொல்கிறேன். இப்போது தினமும், பலர், ஆங்காங்கே நாடு முழுவதும், மனைகளையும், நிலங்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி, துண்டுதுண்டாக விற்பனை ஆகலாம்; ஆனால் முழுவதும் சேர்ந்து விற்பனை ஆகக் கூடாது – என்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

‘இரண்டாயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறபோது, நஷ்டம் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம்? இரண்டாயிரம் கோடி ரூபாய் லாபம் என்று சொல்வதுதான் சரி’.

– இவ்வாறு கபில் சிபல் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஏன் இந்த நிலை? – குருமூர்த்தி பேச்சு

சென்னை:

சென்னையில் நிருபர்களிடம் பேசிய குருமூர்த்தி, இந்தியா விற்பனை பற்றி கபில் சிபல் கூறியவற்றை வன்மையாக மறுத்தார். ‘இந்தியாவில், பன்னிரெண்டு கோடி எழுபது லட்சத்து எண்பத்தொன்பதாயிரத்து நூற்று இரண்டு கோடி சதுர அடி நிலப்பரப்பு இருக்கிறது. இதற்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் என்று விலை வைத்தால் கூட, ரூபாய்க்கு நூறு பைசா என்பதாலும், ஒரு சதுர அடிக்கு, நூற்று நாற்பத்தியாறு சதுர அங்குலம் என்பதாலும், இந்தியாவிற்கு நூற்றி இருபத்தெட்டு கோடியே எண்பத்தெட்டு கோடியே தொண்ணூற்றி நாலு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பு இருக்கும். அது இப்போது நஷ்டம்; இவ்வளவு நஷ்டத்தை உண்டாக்குகிற ஒப்பந்தத்தைப் போட்டுள்ளார் கபில் சிபல். என்னுடன் ஒண்ணாம் கிளாஸில் படித்து, ஒண்ணாம் வாய்ப்பாடை ஒழுங்காக ஒப்புவித்த என் நண்பர் கபில் சிபல், இந்தியா விற்பனையில் நஷ்டமே இல்லை என்று சொல்ல என்ன காரணம்?

அமெரிக்கா!

நாம் அமெரிக்க நாகரிகத்தை காப்பியடிக்க ஆரம்பித்து, குடும்பப் பொறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல், நமது குடும்பத்தினரை ஆதரவில்லாமல் விட்டதுதான் இதற்குக் காரணம். வேதங்களில் சொல்லியபடி நமது குடும்பத்தை நாம் கவனித்திருந்தால் இப்படி நடக்குமா? இதைத்தான் ஸ்வாமி விவேகானந்தர் எச்சரித்தார். இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

வந்தார் நீரா ராடியா !

டெல்லி:

ஊழல் விவகாரங்களில் வழக்கம்போல நடப்பது இப்போதும் நடந்திருக்கிறது. இந்தியா விற்பனை ஊழல் தொடர்பாக, நீரா ராடியாவுடன் பலர் பேசிய டெலிஃபோன் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. இதைச் சுற்றுச்சூழல் இலாகா பதிவு செய்துள்ளது. நீரா ராடியா பேச்சுக்கள், நாட்டின் சுற்றுச் சூழலை எந்த அளவு பாதிக்கிறது என்று பார்ப்பதற்காக, இந்த டெலிஃபோன் பேச்சுப் பதிவுகள் நடந்ததாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு நெருக்கமான ஒருவர் விளக்கினார்.

நீரா ராடியா பலருடன் பேசிய பேச்சுக்களிலிருந்து ஒரு சில பகுதிகள் :

ராசா!

நீரா ராடியா : ஹலோ மிஸ்டர் ராஜா! இந்தியா விற்பனையிலே, நீங்க...

ராசா : அதெல்லாம் இப்ப வேண்டாம். முக்கியமான விஷயம் சொல்றேன். கலைஞர் குடும்பத்திலே சில பேர், இந்தியாவை விற்க ஒப்பந்தம் போட்ட கம்பெனியிலே பங்கு வெச்சிருக்கிறதா சொல்றாங்களே...

நீரா ராடியா : ஆமாம். அஃப்கோர்ஸ்! அது இல்லாம இருக்குமா?

ராசா : அதான் கேட்டேன். சரி.

டெலிவிஷன் நிருபர் பர்கா தத்!

நீரா ராடியா : பர்கா தத்! இந்தியா விற்பனை ஒப்பந்த கம்பெனியிலே, கருணாநிதி குடும்பத்துக்கு பங்கு இருக்குதே... அந்த ஷேர்ஸ் பத்தி...

பர்கா தத் : தெரியும். ஆனா, குடும்பத்துலே ஒரு பிரிவுக்குத்தான் அந்த பங்கு இருக்கு. அதனாலே, மற்ற பிரிவுகள், அந்த கம்பெனிகிட்டேயிருந்து, இந்தியாவை வாங்க இப்போ விலை பேசறாங்க.

நீரா ராடியா : அப்படியா?

பர்கா தத் : ஆமாம். வீர் சாங்க்வி மூலமா அஹமத் படேல் கிட்டே பேசி, இந்த டீலை முடிக்க முடியுமான்னு பார்க்கறாங்க.

நீரா ராடியா : என்ன விலை தராங்களாம்?

பர்கா தத் : அந்த கம்பெனி இந்தியாவை இரண்டாயிரம் கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருக்குது. கலைஞர் குடும்பத்துலே, ஒரு பிரிவு 2100 கோடி தர்றதா சொல்றாங்க!

நீரா ராடியா : வெரிகுட்.

அஹமத் பட்டேல்!

நீரா ராடியா : ஹலோ அஹமத்! என்ன முடிச்சாச்சா?

அஹமத் பட்டேல் : அந்த இந்தியா டீல்தானே? முடிஞ்ச மாதிரிதான். நானே ஸ்டாலின்கிட்டே பேசிட்டேன்.

நீரா ராடியா : ஃபைனல் விலை என்ன?

அஹமத் பட்டேல் : இரண்டாயிரத்து நூற்றி இருபது கோடி.

நீரா ராடியா : குட்! அப்ப இனிமே இந்தியா, கலைஞர் குடும்பத்துடைய சொத்து! வெரிகுட்! இதை டாடாகிட்டே சொல்றேன். சந்தோஷப்படுவார்.

பெரியாரின் வெற்றி! – முதல்வர் பேச்சு

சென்னை:

முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனக்கே உரிய ராஜதந்திரத்துடனும், நகைச்சுவையுடனும் அவர் பதில் அளித்தார்:

பெண் நிருபர் : நீரா ராடியா டேப்பில், நீங்களும் அஹமத் பட்டேலும் பேசியதா வந்திருக்குதே?

முதல்வர் : நானும் ஆம்பளை, அஹமத் படேலும் ஆம்பளை. இரண்டு ஆம்பளைங்க பேசினா, அதுலே உனக்கென்ன வந்தது?

பத்திரிகைகள் : இந்தியாவை வாங்க ஒப்பந்தம் போட்ட கம்பெனிகிட்டே, உங்க குடும்பம் இந்தியாவை வாங்குகிறதா?

முதல்வர் : இந்தியா என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா? அதைப் பத்தி உனக்கென்ன? இந்தச் செய்தி வந்ததுனாலே, வெங்காய விலை பத்து பைசா குறைஞ்சிருக்குது. ஏழைங்களுக்கு இப்ப மகிழ்ச்சியா இருக்குது. அது பார்ப்பன பத்திரிகைகளுக்குப் பொறுக்கலையா?



1 comment:

ravichandran said...

amaam, idu arasiyal jodhidama...illai arasiyal ambalama...? amount romba kammi...adukku enna seyya mudiyum...india'dan ippo romba 'cheap'a aayiduthe....good piece....keep it up...

Post a Comment