Friday, February 11, 2011

அமெரிக்க மாணவர்கள் விஷயம் – உண்மை என்ன ?

மெரிக்காவில் டிரை வேலி பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களின் கால்களில், ‘ரேடியோ ட்ராக்கிங்’ என்ற கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலால், இந்தியாவில் பரபரப்பும் அதிர்ச்சியும் பரவியது. அரசியல் கட்சிகள் அமெரிக்கத் தூதரகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்தின. வெளியுறவுத் துறை அமைச்சகம் அமெரிக்காவிற்குக் கண்டனம் தெரிவித்தது. இந்திய மாணவர்களின் மீது குற்றமே இல்லை என்றும், மாணவர்களை மிருகங்களைப் போல் நடத்தி, அமெரிக்க அரசு அத்துமீறி விட்டது என்றும் இங்கு விவாதிக்கப்படுகிறது.

‘டிரை வேலி பல்லைக் கழகம்’ என்ற பெயரில் இயங்கி வந்த அந்த நிறுவனத்திற்குக் கல்லூரிகள் கிடையாது. வகுப்பறைகள் கிடையாது. அது ஒரு லெட்டர் ஹெட் பல்கலைக் கழகம் போன்றது. அதில் படிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் 95 சதவிகிதம் பேர் இந்தியர்கள். அவர்களில் பெரும் பகுதியினர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படிக்க பல ஆயிரம் இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை அமெரிக்க நிர்வாகம் இழிவாக நடத்தியதாக இதற்கு முன் தகவல் வந்ததில்லை. இந்த டிரை வேலி பல்கலை கழகச் சம்பவம் விதிவிலக்கானது.

அமெரிக்காவில் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று பகுதி நேர வேலை வாய்ப்பு. வெளிநாட்டு மாணவர்கள் வாரத்தில் இருபது மணி நேரம் மட்டுமே பகுதிநேர வேலைகளில் ஈடுபடலாம். அதற்கும் கூட காத்திருக்க வேண்டும். பல்கலைக் கழகத்தில் போய்ச் சேர்ந்தவுடனேயே வேலை செய்ய ஆரம்பித்து விட முடியாது.

ஆனால், டிரை வேலி பல்கலைக் கழகம், படிக்க வந்த முதல் நாளே பகுதி நேர வேலையில் சேரலாம் என்று தெரிவித்திருக்கிறது. தவிர, தரமான மற்ற பல்கலைக் கழகங்களை விட டிரை வேலி பல்கலைக் கழகத்தில் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு. பாடத் திட்டமும், தேர்வு முறையும் கூட எளிமையானவை. இவை எல்லாம்தான், இந்திய மாணவர்கள் டிரைவேலி பல்கலைக் கழகத்தைத் தேடிச் செல்லக் காரணமாக இருந்தன. ‘அது போலிப் பல்கலைக் கழகம் என்பது எங்களுக்குத் தெரியாது’ என்று மாணவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

பொதுவாக அமெரிக்காவில் உயர் கல்வியைத் தேடிச் செல்லும் மாணவர்கள், தாங்கள் படிக்க விரும்பும் துறையில் சிறந்து விளங்கும் பல்கலைக் கழகங்களைப் பட்டியலிட்டு, அதில் ஒன்றைத் தேர்வு செய்வதுதான் வழக்கம். ‘டிரை வேலி பல்கலைக் கழகத்தைத் தேர்வு செய்தவர்களின் நோக்கம் உயர் கல்வி அல்ல, மாணவர்கள் என்ற போர்வையில் அமெரிக்காவிற்குள் நுழைந்து விட வேண்டும். வேலை தேடிக் கொள்ள வேண்டும். அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுவிட வேண்டும் என்பதுதான்’ என்று அமெரிக்க குடியுரிமைத் துறை கூறுகிறது.

‘டிரை வேலி பல்கலைக் கழகம் ஒரு போலி பல்கலைக் கழகம். அதன் வலையில் சிக்கி நாங்கள் பாதிக்கப்பட்டு விட்டோம்’என்று மாணவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் ஒரு போலி பல்கலைக் கழகத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டு விட்டதாக ஏன் முன்பே புகார் தரவில்லை’ என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் அமலாக்கத் துறை கேட்கிறது. இதற்கு இந்தியத் தரப்பில் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

No comments:

Post a Comment