Friday, February 11, 2011

காலாவதியான கொள்கைகளுக்கு தடை

போலி மருந்துகள், காலாவதியான உணவுப் பொருட்கள் போன்றவற்றிற்கு தடை விதித்து, பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் அரசு, அந்த வகையில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. மக்களின் மூளையைக் குழப்பி, அவர்களை கிட்டத்தட்ட மனோ வியாதிக்காரர்களாக மாற்றக் கூடிய ஆபத்தான மேலும் பல காலாவதி / போலி சமாச்சாரங்கள் நாட்டில் இன்னும் நடமாடிக் கொண்டிருக்கின்றன. நீண்ட நெடுங்காலமாக மக்களை குறி வைத்து ஏவப்பட்டுள்ள பல அரசியல் கட்சிகளின் கொள்கைகள் எப்போதோ காலாவதியாகி விட்ட பிறகும், தொடர்ந்து மக்களிடையே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல போலி வாக்குறுதிகளும், மக்களின் அறிவைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றையும், கண்டுபிடித்து தடை விதிக்க தேர்தல் கமிஷன் முன்வர வேண்டும்.

அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையே கண்டுபிடித்து தடுக்க முடியாத தேர்தல் கமிஷனால், காலாவதியான கொள்கைகளைக் கண்டுபிடிப்பது சற்று கஷ்டமான காரியம்தான். தேர்தலில் ஆறு கோடி ரூபாய் செலவழித்து விட்டு, 6,713 ரூபாய் 36 பைசாதான் செலவழிக்கப்பட்டது என்று இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு கணக்குக் காட்டும் கட்சிகளையே கண்டிக்க முடியாத தேர்தல் கமிஷன், போலியான வாக்குறுதிகளைக் கண்டுபிடித்து தடுத்து விடும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லைதான். இருந்தாலும் அவற்றை தேர்தல் கமிஷனுக்கு அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமை என்று கருதுகிறோம். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதல் கட்டமாக – போலியான, காலாவதியான கொள்கைகள் இடம் பெறும் தேர்தல் அறிக்கைகளில் சிறிய எழுத்திலாவது, ‘ஏமாறுவதற்கு நூறு சதவிகித வாய்ப்பு உண்டு. தேர்தல் அறிக்கைகளை நம்புவது மூட நம்பிக்கை’ என்று எச்சரித்திட தேர்தல் கமிஷன் நிர்பந்திக்க வேண்டும். இதன் காரணமாக ஒரு சிலராவது ஏமாறாமல் தடுக்க முடியும் என்பது நமது யோசனை.

‘ஊழலற்ற ஆட்சி’ என்ற போலி வாக்குறுதியை நம்பி ஏமாறுவது மக்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இது கிண்டல் என்பது கூட பலருக்குப் புரியாததுதான் சோகம். இதை நம்பி விடும் இதய பலவீனம் கொண்டவர்கள் அறுபதாயிரம் லட்சம்  கோடி, எழுபதாயிரம் லட்சம்  கோடி ஊழல் பற்றியெல்லாம் கேள்விப்படும்போது மாரடைப்பு ஏற்படவும் சாத்தியக் கூறு உள்ளது. எனவே, இனி எந்த அரசியல் கட்சியும் ‘ஊழலற்ற ஆட்சி’ என்ற வாக்குறுதியை அளிப்பதற்கு தேர்தல் கமிஷன் தடை விதிக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ‘முடிந்த வரை குறைவாக ஊழல் செய்கிறோம்’ என்று பிரச்சாரம் செய்ய கட்சிகளை அனுமதிக்கலாம்.

‘இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் பெற்றுத் தருவோம்’ என்பது பல ஆண்டுகளாக மக்களிடையே புழக்கத்தில் உள்ள போலி வாக்குறுதி. ஏராளமான இலங்கைத் தமிழர்களை பலி வாங்கியது இந்த போலி வாக்குறுதிதான். இலங்கையைத் தாண்டி, இந்தியாவிலும் இதனால் பல தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘மாநில சுயாட்சி’ என்பது எப்போதோ காலாவதியாகி விட்ட ஒரு கொள்கை. ‘அந்தக் காலாவதியான கோஷத்தை எழுப்புவதால், பயன்தான் ஏற்படாதே தவிர, ஆபத்து எதுவும் வராது’ என்று தமிழக முதல்வர் வாதாடக் கூடும். இருந்தாலும், ஐம்பது வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கொள்கையை ‘எக்ஸ்பைரி டேட்’ கூட குறிப்பிடாமல் தொடர்ந்து பயன்படுத்தி வருவது மாநிலத்துக்கு நல்லதல்ல. திடீரென கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தி, இது சம்பந்தமாக தி.மு.க. வின் அனைத்து கொள்கை விளக்க நூல்களையும் பறி முதல் செய்து யார் கண்ணிலும் படாதபடி குப்பை கூளங்களுடன் சேர்த்து விடலாம்.
‘காமராஜ் ஆட்சி’ என்ற கொள்கை போலியானது மட்டுமல்ல, காலாவதியும் ஆகிவிட்ட ஒன்று. இரட்டிப்பு ஆபத்து நிறைந்த இக்கொள்கையை காங்கிரஸில் உள்ள பல கோஷ்டியினர் அவ்வப்போது இணைந்தும் பல சமயங்களில் தனித் தனியாகவும் விற்பனை செய்ய முயற்சிப்பது அதிர்ச்சி தருகிறது. ‘இவர்தான் காமராஜ்’ என்று யாரையாவது காட்டினாலும் நம்பி விடக் கூடிய அளவுக்கு புத்தி பேதலித்தவர்களை இந்த போலிக் கொள்கைதான் உருவாக்கி இருக்கிறது. எனவே, இந்தக் கொள்கை, தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்போது, ‘வரும்... ஆனா வராது...’ என்ற வாசகத்தையும் சேர்த்து எழுத வேண்டும் என காங்கிரஸுக்கு தேர்தல் கமிஷன் உத்திரவாவது இட வேண்டும்.

‘ஸ்விஸ் பாங்க்கில் போடப் பட்டிருக்கும் ஊழல் பணத்தை மீட்போம்’ என்ற வாக்குறுதி, அத்வானி கம்பெனிக்குப் போட்டியாக, மன்மோகன் சிங் கம்பெனி அவசரம் அவசரமாகத் தயாரித்து அரசியல் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய போலி சரக்கு. விற்பனைக்கு வரும்போதே காலாவதியாகி வந்த ஒரே ப்ராடக்ட் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. மீண்டும் இது விற்பனைக்கு வரும்போது வாடிக்கையாளர்கள் ஏமாந்து விடாமல் தடுக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் கடமை.

இதேபோல, ‘உணவு பெறுவது அடிப்படை உரிமையாகி விட்டது’, ‘வேலைவாய்ப்பு உரிமை சட்ட மாக்கப்பட்டு விட்டது’ என்பதெல்லாம் சமுதாயத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சமீபத்திய போலி கொள்கைகள். ஏற்கெனவே ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற மத்திய அரசின் வாக்குறுதி, நேரு காலத்தில் தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை, காலாவதி தேதி கூட குறிப்பிடப்படாமல் பயன்படுத்தப்பட்டு வருவது நினைவிருக்கலாம். அதே நிறுவனத்தார்தான் ‘உணவும் வேலையும் அடிப்படை உரிமை’ என்ற போலி கொள்கைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை நம்பி வேலையும் கிடைக்காமல், உணவும் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கானவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றும் வகையில், ‘அரசை நம்பி மோசம் போகாதீர். அரசால் எதுவும் முடியாது. உங்களுக்கு வேண்டியதை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்’ என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் அரசு முழுப் பக்க விளம்பரம் கொடுக்க நீதிமன்றங்கள் உத்திரவிட வேண்டும்.

‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்’ என்ற பா.ஜ.க.வின் கொள்கை, நீண்ட காலமாக புழக்கத்தில் இருக்கிறது. காலாவதியாகி விட்ட இந்தக் கொள்கை, பெரும்பாலும் தேர்தல் சமயங்களில் மட்டும் ‘ஸீஸன் ஃபீவர்’ போல மக்களைப் பாதிக்கிறது. ஹிந்துத்துவா என்ற மூலப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த ‘ராமர் கோவில் கொள்கை’யைப் பற்றிக் கேள்விப்படும்போதே, ஸைடு எஃபெக்டாக சிறுபான்மையினர் படபடப்பாலும் மூச்சிரைப்பாலும் பாதிக்கப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் இயக்கத்தவர்களுக்கு ரத்தக் கொதிப்பு பெருமளவு அதிகரித்து விடுகிறது. இந்த வியாதி தொற்று வியாதி போல் நாடு முழுவதும் பரவி விடுகிறது. டிசம்பர் ஆறாம் தேதி நெருங்கும்போது பாதுகாப்புப் படையினருக்கு டென்ஷன் அதிகரிக்கிறது. எனவே, இந்த நிலையை மாற்ற, இதையும் காலாவதியாகி விட்ட கொள்கையாக அரசு அறிவிக்க வேண்டும்.

‘கச்சத் தீவை மீட்போம்’ என்ற கொள்கையை நினைவு தெரிந்த காலம் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் திடீர் திடீரென்று பயன்படுத்துவதால், அதை உண்மை என்று நம்பி விடும் சில மீனவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு எங்கே போகிறோம் என்றே புரியாமல் குழம்பி, இலங்கை கடற் பகுதிக்குள் சென்று ஆபத்துக்கு ஆளாகி விடுகின்றனர். சிலர் பலியாகவும் நேரிடுகிறது. இதை நம்பி மோசம் போக வேண்டாம் என்று யாராவது மீனவர்களுக்கு அறிவுறுத்தினால் நல்லது.

இவை தவிர, ‘மதச்சார்பற்ற அரசு நடத்துவோம்’, ‘ஜாதியை ஒழிப்போம்’ ‘பூரண மது விலக்கை படிப்படியாகக் கொண்டு வருவோம், ‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ ‘நல்லாட்சி’ ‘பொற்கால ஆட்சி’ என்று பலவிதமான போலி கொள்கைகளும், காலாவதியாகி விட்ட வாக்குறுதிகளும் மக்களின் மூளையை மழுங்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாமே போலியானவை, காலாவதியானவை- என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை.

கடைசியாக ஒரு வேண்டுகோள். அரசியல் பிரமுகர்கள் எடுத்துக் கொள்கிற பதவிப் பிரமாணமே காலத்திற்கு ஏற்றதாக இல்லை. எனவே, அதை ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பால் எந்தவிதப் பற்றும் இல்லாத நான், பிரம்மாண்டமான ஊழல்களில் அடிக்கடி ஈடுபட மாட்டேன் என்றும், அவசியம் ஏற்பட்டாலொழிய நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்றும், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தவிர, வேறு யாருக்கும் சலுகை காட்ட மாட்டேன் என்றும், முடிந்தபோதெல்லாம் சட்டத்தை மதிப்பேன் என்றும் தற்சமயத்திற்கு உறுதி கூறுகிறேன்’ என்று மாற்றி விடலாம். இதில் போலித் தன்மை அவ்வளவாக இருக்காது.


காலாவதிக் கொள்கைகளை விடுங்கள். தோன்றி பல வருடங்களாகியும் தனியாக தேர்தலைச் சந்தித்து டெபாஸிட் கூட வாங்க முடியாத பல காலாவதிக் கட்சிகளே தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் சமயத்தில் ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து சில தொகுதிகளைப் பெற்று, ஒன்றிரண்டில் ஜெயிக்கும் அவை எதிர் காலத்தில் எத்தனை போலி கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பப் போகின்றனவோ? இத்தகைய கட்சிகளையும் காலாகாலத்தில் பறிமுதல் செய்து குப்பைத் தொட்டிகளில் வீசினால்தான் தமிழக அரசியல் களம் ஆரோக்கியம் பெறும். சொல்லி விட்டோம். போலிகள் ஜாக்கிரதை.

No comments:

Post a Comment